மாநில சுயாட்சிக்கு விரோதமாக திருச்சியில் கவர்னர் ஆய்வு – தி.மு.க. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அங்கு ஆய்வுப்பணி மேற்கொள்ளவதாக கூறப்படுகிறது, அவர் மேற்கொள்ளும் இந்த செயல் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று தமிழக காட்சிகள் மற்றும் இயக்கங்கள் கண்டனம் தெரிவித்தன. இருந்த போதும் அவர் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்து வருகிறார்.

மேலும், அவர் பயணிக்கும் மாவட்டங்களில் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை பிரச்சாரம் செய்து வருகிறார். அரசுத் துறை அதிகாரிகளுக்கு சுகாதாரப்பணி குறித்த ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் கருப்புக்கொடி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் இன்று திருச்சி வந்துள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிற்பகல் மாவட்ட கலெக்டர் உள்பட அனைத்து துறை உயர் அதிகாரிகளையும் அழைத்து ஆய்வு செய்து ஆலோசனைகளையும், உத்தரவுகளையும் வழங்க உள்ளார்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் இந்த செயல் மாநில சுயாட்சி கொள்கைகளுக்கு விரோதமாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களை பறிக்கும் வகையிலும் உள்ளதாகவும் கூறி கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று காலை பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு சென்ற கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி புதுக்கோட்டை மெயின்ரோடு சுப்பிரமணியபுரம் ஜெயில் கார்னர் அருகே திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது கவர்னருக்கு எதிராக கோ‌ஷங்களையும் எழுப்பினர். தி.மு.க.வினர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் கவர்னர் செல்லும் வழியெங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top