ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக போராட்டம்;பெண்கள் உட்பட 250 பேர் கைது

 

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், சிப்காட் வளாகத்தில் அமைய உள்ள 2-வது ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது என்பதனை வலியுறுத்தியும் நடந்து வரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து வெளியேறும் புகையினால் மாசு ஏற்படுவதாகவும், அந்த புகையில் நச்சுத்தன்மை இருப்பதாகவும் குமார ரெட்டியார்புரம் கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். எனவே அந்த நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தது. இதுபற்றி அறிந்த குமாரரெட்டியார்புரம் கிராமமக்கள் விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.பூங்கா முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாலை வரை நடந்த உண்ணாவிரதம் நள்ளிரவு வரை நீடித்தது. இதுபற்றி அறிந்த தூத்துக்குடி சப்-கலெக்டர் பிரசாந்த், சிப்காட் தென்பாகம் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது கிராம மக்கள் சப்-கலெக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென கூட்டத்தில் இருந்த ஒரு வாலிபர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்க முயன்றதால் பதட்டம் நிலவியது.

சப்-கலெக்டரிடம் கிராம மக்கள் கூறுகையில், ‘ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தால் நீர்நிலைகள் பாதிக்கப்படுகிறது. காற்றும் மாசுப்படுவதால் எங்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுகிறது. இந்த நிறுவனத்தை மூடக்கோரி பல போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது அந்த நிறுவனம் விரிவாக்கப்பணிகளை தொடங்க உள்ளது. எனவே விரிவாக்கப்பணிகளை தடுத்து நிறுத்தி ஸ்டெர்லைட் நிறுவனத்தை இழுத்து மூடவேண்டும்’ என கூறினர்.

இதை கேட்ட சப்-கலெக்டர் உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் சப்-கலெக்டரின் உறுதியை ஏற்காத கிராம மக்கள் உடனடியாக ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு தடை விதித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என கூறி விடிய விடிய உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்தது. இன்று நடந்த போராட்டத்தில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் சீருடையில் கலந்து கொண்டனர். அவர்கள் ஸ்டெர்லைட் நிறுவன ஆலைக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். உண்ணாவிரதம் நடைபெறும் இடம் பிராதான சாலை என்பதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மதியம் 11.45 மணியளவில் தூத்துக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 150 பெண்கள் உள்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.

பின்னர் கைதானவர்களை மினி பஸ்களில் ஏற்றி அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top