அமித் ஷா மகன் ஊழல் குறித்து பேச தயங்குவது ஏன் மோடி?? : ராகுல் காந்தி கடும் சாடல்

ஊழல் குறித்து பிரதமர் மோடி பேச விரும்பினால், அமித் ஷா மகன் ஜெய் ஷா சட்டவிரோதமாக சொத்து குவித்தது குறித்து கொஞ்சம் பேசுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

அமித் ஷா மகன் ஜெய் ஷா அவர்கள் 3 மாதத்தில் 80 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது தொடர்பாக செய்தி வெளியிட்ட இணையதளம் மீது அமித் ஷா சார்பில் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக முன்கூட்டியே கர்நாடகத்தின் வடக்கு பகுதி மாவட்டங்களில் “மக்களின் ஆசிர்வாதம்” என்ற பெயரில் ராகுல் காந்தி 3 நாள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

நேற்று 3-வது நாளாக ராய்ச்சூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்ட அவர் ராய்ச்சூர் டவுனில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் சந்தித்து பேசினர், இந்த சந்திப்பு 15 நிமிடங்கள் வரை நிகழ்ந்தது.

இதை தொடர்ந்து ராய்ச்சூர் நகரில் இன்று மக்கள் முன் ராகுல் காந்தி பேசியதாவது:

பிரதமர் மோடி ஊழல் குறித்து பேசுவதற்கு முன், அவர் தனது பக்கம் இருப்பவர்களை சிறிது திரும்பி பார்க்க வேண்டும். ஏன் என்றால் அருகில் எடியூரப்பா, பாஜக முன்னாள் அமைச்சர்கள் பலர் இருப்பார்கள்.

அப்படியே அவர் ஊழல் குறித்து பேச விரும்பினால், அமித் ஷா வின் மகன் ஜெய் ஷாவின் ஊழல் குறித்து சிறிது பேசலாம். அமித்ஷாவின் மகனின் சொத்து கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ரூ.50 ஆயிரமாக இருந்தது. தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.80 கோடியாக இருக்கிறது.

ஜெய் ஷா ரூ.50 ஆயிரம் முதலீட்டில் தொடங்கிய நிறுவனம் 3 மாதத்தில் எப்படி 80 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்தது என்பதை இந்த நாட்டுக்கு கூற வேண்டும்.

கர்நாடக மாநிலத்தின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்றவர், 4 முன்னாள் அமைச்சர்களும், பாஜகவின் 11 தலைவர்களும் ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றவர்கள்தான். ஆதலால் ஊழலை குறித்து மோடி பேசும் போதுஅக்கம் பக்கம் பார்த்து பேசவேண்டும்.

அமித்ஷாவின் மகன் சட்டவிரோதமாக சொத்து குவித்து இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறியுள்ளது. அதுபற்றி பிரதமர் பேச தயங்குவது ஏன்?. தேர்தலுக்கு முன்பாக 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். நமது நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.

நமது நாட்டை விட சீனாவில் 24 மணிநேரத்தில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு சீனா வேலைவாய்ப்பு தருகிறது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க அந்த நாடு நடவடிக்கை எடுத்து வருகிறது.

விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்யக்கோரி நான் நேரடியாகவே பிரதமர் மோடியை அவரின் அலுவலகத்தில் சந்தித்தேன். அப்போது, விவசாயிகள் கடன் தொல்லையில் வேதனை அடைந்து வருகிறார்கள். அவர்களின் கடனை தள்ளுபடி செய்யுங்கள் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், அவரோ என் வார்த்தையை செவிமெடுத்து கேட்கவில்லை, அமைதியாகவே அமர்ந்து இருந்தார்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top