இலங்கை உள்ளூராட்சி தேர்தல்:மக்களை பொருட்படுத்தாத தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பின்னடைவு

 

 

இந்த தேர்தல் முடிவுகள் மக்களின் கருத்தை பொருட்படுத்தாத தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் போக்குக்கு கிடைத்த பெரிய அடி என்று தமிழீழ சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

 

கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சில இடங்களில் சிறப்பான வெற்றிகளை பெற்றிருக்கிறது மற்றும் வடக்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸும், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும், கூட சில இடங்களில் கணிசமான வெற்றியை பெற்றுள்ளன.

 

‘வெள்ளைவான் கடத்தல் கலாச்சாரம், ஊழல் ஆகியவைதான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டு. அவரது ஆட்சி மாறிய பின்னர், இங்கு அப்படியான வன்செயல்கள் குறைந்திருக்கின்றன அல்லது இல்லாது போய்விட்டன என்பது உண்மைதான்’ ஆனாலும் தற்போதைய அரசில் எந்த விதமான முன்னேற்றமும் நடக்கவில்லை என்பது தற்போது மக்களுக்கு பெரும் சுமையாக தெரிவதாக சில ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள்  இதுவே மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த  காரணம் என்கிறார்கள்

 

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த முடிவுகள் சற்று பின்னடைவே என்பதை ஒப்புக்கொள்ளும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றுக்கு மாத்திரமல்லாமல், சிங்களக் கட்சிகளுக்கும் மக்கள் வாக்களித்திருப்பது வேலைவாய்ப்பு மற்றும் அத்தியாவசிய தேவைகள் குறித்த அவர்களது வாக்குறுதிகளுக்காக என்கிறார்.

 

சமாந்தரமான இரு வழி பாதையாக தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் மக்களின் உடனடித்தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியவை இருக்க வேண்டும் என்பது தனது கருத்தாக இருக்கின்ற போதிலும், அதில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பல விதமான பிரச்சினைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இரண்டாம் பட்சமாக கருதிவிட்டது என்றும், ஆனால், மக்கள் அவற்றை முதல் பிரச்சினையாக கருதுவதையே தேர்தல் முடிவுகள் காண்பிப்பதாகவும் கூறுகிறார். அதுமாத்திரமன்றி தமிழர் பிரச்சினைக்கான தீர்வு நடவடிக்கைகளும் இனி சிரமமானதாக இருக்கும் என்றும் அவர் கூறுகின்றார்.

 

தொழில் உருவாக்கம், பொருளாதார முன்னேற்றம் என எந்த விதத்திலும் ஒரு முன்னேற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு தற்போதைய அரசு ஏமாற்றத்தையே தந்துள்ளதாகவும் கூறுகிறார் .

 

வடக்கு கிழக்கில் இன்னுமொரு விசயம் அமைதியாக நடந்திருக்கிறது. அங்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையான உறுப்பினர்களை பெற்றிருந்தாலும், இந்த தேர்தல் அதற்கு ஒரு பின்னடைவாக பலராலும் பார்க்கப்படுகின்றது.

 

தற்போதைய அரசாங்கத்துடன் தாம் முன்னெடுக்கும் தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நடவடிக்கைகளுக்கான ஒரு ஆணையாக இந்த தேர்தலை அந்தக் கட்சி முன்வைத்திருந்தது. ஆனால், யாழ் மாநகர சபை உட்பட வடக்கு கிழக்கில் பல சபைகளில் அந்த கட்சியால் ஆட்சியமைக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் அப்படி அமைப்பதாயின் அவர்கள் தாம் தமிழர் எதிரிகளாக வர்ணித்த சில கட்சிகளோடு கூட்டுச் சேர வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது

 

நேரடி மற்றும் விகிதாசார தேர்தல்களின் கலப்புமுறையில் நடந்த இந்த தேர்தலின் முடிவுகள் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களை சற்று குழப்பிவிட்டிருக்கிறது. வாக்குகளை எண்ணி ஆட்களை தேர்வு செய்வதில் இந்தத் தடவை தேர்தல் ஆணையமும் பெரும் கால தாமதத்தை எதிர்கொண்டது. வாக்குகளை எண்ணி கணிக்கும் முறை புதிது என்பது அதற்கான காரணமாக அதிகாரிகளால் கூறப்படுகின்றது.

 

அதேவேளை அரசாங்கத்தின் மற்றும்தேர்தலில் வென்ற தரப்புகளின் அடுத்த கட்ட நகர்வுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பல இடங்களில் ஆட்சியமைப்பதிலும் சிக்கல்கள் காணப்படுகின்றன.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top