சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பு; எதிர்த்து ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டசபையில் இன்று திறக்கப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரின் படத்தை சட்டப்பேரவையில் திறக்கக்கூடாது என தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. படத்திறப்பு விழாவையும் புறக்கணித்தன.

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படதிறப்பு விழா நிகழ்ச்சியில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு தாக்கல் செய்துள்ளது. தி.மு.க மூத்த வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்த இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் திறப்பதற்கு எதிரான வழக்கு கடந்த 29ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில், விசாரணைக்கு வரவில்லை. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது எடப்பாடி அரசு சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை திறந்ததாக வில்சன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உருவப்படம் 7 அடி உயரம் மற்றும் 5 அடி அகலம் கொண்டது. சட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டு உள்ளது. இது முதல் பெண் தலைவரின் படம். மு.க. ஸ்டாலின் இருக்கைக்கு எதிரே ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சியில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top