தென் மாநில கியாஸ் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது

தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சொந்தமான சுமார் 4,500 கியாஸ் டேங்கர் லாரிகள் இந்தியா முழுவதும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கான வாடகையை எண்ணெய் நிறுவனங்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மண்டல வாரியான டெண்டர் மூலம் நிர்ணயம் செய்து வந்தன. இந்த நிலையில் புதிய வாடகை டெண்டரை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி அறிவித்தன.

இந்த டெண்டர் காலம் 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் இதுவரை மண்டல அளவில் நடத்தப்பட்டு வந்த மண்டல வாரியான டெண்டர் நடைமுறை மாறி, தற்போது ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி டெண்டர் என்ற புதிய முறையை மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.

இந்த நிலையில் கடந்த மாதம் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரியை டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேரில் சந்தித்து, மாநில அளவில் டெண்டர் நடைபெற்றால் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநில பதிவெண் கொண்ட 4,500 லாரிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், மற்ற கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் என்றும் முறையிட்டனர்.

இந்த புதிய டெண்டர் நடைமுறை மூலம் ஒரு வாகனம் எந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதோ, அந்த மாநிலத்தில் நடைபெறும் டெண்டரில் தான் பங்கேற்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.

எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில அளவிலான வாடகை டெண்டர் நடைமுறையை திரும்பப்பெற வலியுறுத்தியும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என்று நாமக்கல்லில் நேற்று முன்தினம் நடந்த தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து நேற்று தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம், செயலாளர் கார்த்திக் ஆகியோர் கூறியதாவது:-

எங்களது முக்கிய கோரிக்கை மீண்டும் மண்டல வாரியான டெண்டர் நடத்த வேண்டும் என்பதாகும். ஆனால் எண்ணெய் நிறுவன அதிகாரிகள், மாநில அளவிலான டெண்டரில் மாற்றம் செய்ய முடியாது. இது அரசின் கொள்கை முடிவு. மாநில அளவிலான டெண்டரில் உங்களுக்கு ஏதேனும் இடையூறு இருந்தால், வாருங்கள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என அழைக்கின்றனர்.

ஆனால் மண்டல வாரியான டெண்டர் வேண்டும் என்பதே எங்களின் பிரதான கோரிக்கை ஆகும். அது நிறைவேறும் வரை திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளோம். எனவே நாளை (இன்று – 12-2-2017) காலை 6 மணி முதல் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 4,200 கியாஸ் டேங்கர் லாரிகள் ஓடாது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கிழக்கு மண்டலத்திலும் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களும் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top