சென்னையில் பிப்.18-ந்தேதி வெல்லும் தமிழீழம் மாநாடு, அரசியல் தலைவர்கள் பங்கேற்பு – திருமுருகன்காந்தி

2009ம் ஆண்டு இலங்கை அரசினால் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். போர் முடிந்து 9 ஆண்டுகள் ஆகியும் இனப்படுகொலையை சந்தித்த தமிழர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை, மேலும் இனப்படுகொலை குற்றத்தில் இருந்து இலங்கை அரசை காப்பாற்ற சர்வதேச நாடுகள் ஐ.நாவில் முயற்சித்து வருகின்றன. இந்த நேரத்தில் தமிழர்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது ஆதலால் ”வெல்லும் தமிழீழம்” – தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு எனும் நிகழ்வை மே 17 இயக்கம் நடந்துள்ளது.

இந்த மாநாடு குறித்து இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மே பதினேழு இயக்கத்தை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியதாவது:-

2009ம் ஆண்டு இலங்கை அரசினால் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு 9 ஆண்டுகளாக இன்னும் இனப்படுகொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 90,000 தமிழ்ப் பெண்கள் விதவைகளாய் ஆக்கப்பட்டுள்ளனர். 30,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 6 பேருக்கு ஒரு சிங்கள ராணுவ சிப்பாய் தமிழர் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் அகதிகளாய் இடம் பெயர்ந்துள்ளனர்.

இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கை அரசினை தப்ப வைக்கும் முயற்சியினை அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் ஐ.நாவில் செய்து கொண்டிருக்கின்றன. வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை குறித்தான விவாதம் நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் தமிழர்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய தேவை அவசியமாகிறது.

இதற்காக ”வெல்லும் தமிழீழம்” மாநாட்டினை சென்னையில் பிப்ரவரி 18 ஞாயிறு அன்று மே பதினேழு இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்திருக்கிறோம். சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் காலை 9 மணிக்கு தொடங்கி இரவு வரை இந்த மாநாடு நடைபெறும்.

இந்த மாநாட்டில் பல முக்கிய நபர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மலேசியாவின் பினாங்கு மாகாணத்தின் துணை முதல்வரான திரு.ராமசாமி அவர்கள் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள். தமிழீழத்தினைச் சேர்ந்த பிரதிநிதிகளும், தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக செயல்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். திரைத்துறையினர், கலைஞர்கள், பேராசிரியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என பலரும் பங்கேற்கின்றனர்.

1. தமிழீழ இனப்படுகொலையின் மீதான சர்வதேச விசாரணை இலங்கை அரசின் மீது நடத்தப்பட வேண்டும்.

2. தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

என்ற இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து இந்த மாநாடு நடத்தப்பட இருக்கிறது.

தமிழீழ விடுதலைக்கு பொதுவாக்கெடுப்பு நடத்திட வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. அதனை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்லும் முயற்சியினை இந்த மாநாட்டின் மூலமாக மேற்கொள்ள இருக்கிறோம். உலகத்தின் வல்லரசுகள் தமிழீழத்திற்கு எதிராக நிற்கும் இந்த வேலையில் எட்டு கோடி தமிழர் நாம் தமிழீழத்திற்கு துணையாக இருக்கிறோம் என்ற செய்தியை உலகுக்கு சொல்ல வேண்டிய தேவையை கருத்தில் கொண்டு இந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதோடு, இந்த மாநாடு பற்றிய செய்திகளை அனைத்து பொதுமக்களும் கொண்டு செல்ல உதவுமாறு ஊடகவியலாளர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top