மீண்டும் கெயில் நிறுவனம் குழாய் பதிக்க முயற்சி; விவசாயிகள் கடும் எதிர்ப்பு – 7 பேர் கைது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டையில் சுழல் மின்உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கிருந்து நல்லூரில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு மின் உற்பத்தி பணிக்காக குழாய்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த குழாய்களை அந்த பகுதி மக்களிடம் எந்த அறிவிப்பும் இன்றி கெயில் நிறுவனம் அமைத்தது. அதன் பின்னர் கெயில் திட்டம் விரிவு படுத்த முற்பட்ட பொது மக்களின் எதிர்ப்புகளால் கெயில் திட்டம் நிறுத்தப்பட்டது. மக்கள் தொடர்ந்து கெயில் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த குழாய்கள் பழுதானதால் அதனை மாற்றி அமைக்க கெயில் நிறுவனத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி மன்னார்குடி அருகே உள்ள கோவிந்த நத்தத்தில் இருந்து திருமக்கோட்டை வரை சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய குழாய் அமைக்க நேற்று காலை பணிகள் தொடங்கியது.

கெயில் திட்டம் கைவிடப்பட வேண்டும் கெயில் நிறுவனம் வெளியேற வேண்டும் என்று மக்கள் போராடி வரும் நிலையில், கெயில் நிறுவனம் குழாய்கள் பாதிக்க இருப்பதை அறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் குழாய் பதிக்கும் பணியை உடனடியாக நிறுத்துமாறு பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோ திவ்யன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி விவசாயிகளான சுப்பிரமணியன், வேதசெல்வம், வெங்கடேசன், சாந்தகுமார், சசிகுமார், அஜித்குமார், விமல், சூரியா ஆகியோர் குழாய் பதிக்கும் பணியை தடுத்தனர்.

இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்கள் 7 பேரை தடுத்து கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் கிராம மக்கள் அப்பகுதிக்குள் நுழைய விடாமல் போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதையடுத்து இன்று காலை முதல் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top