தரமற்ற நிலக்கரி இறக்குமதி, ரூ.3,025 கோடி ஊழல்: தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

வெளிநாட்டில் இருந்து தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்ததின் மூலம் தமிழக அரசு ரூ.3,025 கோடி ஊழல் செய்திருப்பதாகவும், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“அ.தி.மு.க. ஆட்சியில், தரம் குறைந்த நிலக்கரியை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்து, 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுக்குள் ரூ.3,025 கோடி ஊழல் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெற்று இருக்கிறது” என்ற அதிர்ச்சித் தகவல், டெல்லி ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூசன் தொடர்ந்துள்ள வழக்கில் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் புதிய மின்திட்டங்களை நிறைவேற்றாமல், மின்தேவை என்ற காரணத்தைக் காட்டி, ரூ.12 ஆயிரத்து 250 கோடி மதிப்புள்ள 2.44 கோடி டன் அளவுக்கு, தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து, இப்படியொரு மெகா முறைகேட்டை செய்துள்ளது அ.தி.மு.க. அரசு என்பது வெட்கக்கேடாக இருக்கிறது. இந்த முறைகேடு குறித்த விவரங்களை, மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை அறிக்கையில் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் அரசு கஜானாவை திட்டமிட்டு கொள்ளையடித்திருக்கும் அ.தி.மு.க. அரசின் உச்சக்கட்ட ஊழலை அம்பலப்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை அறிக்கையில், “இந்தோனேஷியாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, அந்நாட்டின் துறைமுகங்களில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டாலும் சிங்கப்பூர், துபாய், ஹாங்காங், பிரிட்டிஷ் தீவுகள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டதாக அந்நாட்டில் உள்ள இடைத்தரகர்கள் மூலம் இன்வாய்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தோனேஷியாவில் உள்ள நிலக்கரி விலையைவிட இந்த இடைத்தரகர்கள் நிர்ணயித்த விலை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அதிகம் இருக்கிறது. இந்தோனேஷியாவில் நிலக்கரி இறக்குமதி செய்யும்போது, அங்குள்ள நிறுவனங்கள் அசல் இன்வாய்சுடன் சேர்த்து 3 நகல்கள் கொடுப்பது வழக்கம். இந்திய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒரிஜினல் இன்வாய்ஸ் கட்டாயமாக கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இந்த தரமற்ற நிலக்கரி இறக்குமதியில், ஒரிஜினல் இன்வாய்ஸ் கொடுப்பதற்கு பதிலாக அவற்றின் ஜெராக்ஸ் காப்பிகள் மட்டுமே சுங்கத்துறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி, இறக்குமதி செய்துள்ள 40 முன்னணி இறக்குமதியாளர்கள் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வருவாய் புலனாய்வுத்துறை விசாரிக்கும் அந்த 40 இறக்குமதியாளர்களில், தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.12,250 கோடி மதிப்பிலான நிலக்கரியை, 5 பேரிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது என்பதும், அந்த இறக்குமதியில்தான் 3 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது என்பதும் உற்று கவனிக்கத்தக்கது.

இப்படிப்பட்ட ‘மெகா’ முறைகேடு நடத்தி தரமற்ற நிலக்கரி அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வாங்கப்பட்டதால்தான் தமிழ்நாடு மின்சார வாரியம் வரலாறு காணாத நஷ்டத்தில் மூழ்கியது. அதுமட்டுமின்றி, தமிழக மின்சார வாரியம் இருமுறை, ஏறக்குறைய ரூ.14 ஆயிரம் கோடிக்கு மின் கட்டணத்தை உயர்த்தியதால், மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்கள், 2018-19-ம் நிதியாண்டில் 3-வது முறையாக 6 சதவீத மின்கட்டண உயர்வை மீண்டும் அனுபவித்தே ஆக வேண்டும் என்று வெளியாகியுள்ள பத்திரிகை செய்திகள் பொதுமக்களை பயமுறுத்தி வருகின்றன.

மக்களின் தலையில் ரூ.14 ஆயிரம் கோடி மின் கட்டணத்தைச் சுமத்தி, மின் வாரியத்தை நஷ்டத்தில் மூழ்க வைத்துள்ள அ.தி.மு.க. ஆட்சியில், 2012-ம் ஆண்டு முதல் 31-3-2016 வரை இருந்த மின்வாரியத் தலைவர்களும், அமைச்சர்களும், முதல்-அமைச்சராக இருந்தவர்களும் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்திருக்கிறார்கள் என்பது இப்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

வரலாறு காணாத இந்த, தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்து அறப்போர் இயக்கத்தின் சார்பிலும், பிரபல மூத்த வக்கீல் பிரசாந்த் பூசன் சார்பிலும் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களை நிச்சயம் புறந்தள்ளிவிட முடியாது.

ஆகவே, டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்காகக் காத்திராமல், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து, உடனடியாக சி.பி.ஐ. விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஆவடியில் உள்ள “ராணுவ சீருடை தயாரிப்பு தொழிற்சாலை”யில் உற்பத்தியை நிறுத்தி, 2,121-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கும் ஒரு தலைப்பட்சமான முடிவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

புகழ் மிக்க ஆவடி சீருடை தொழிற்சாலையை மூடுவதற்காக மத்திய பா.ஜ.க. அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவது தமிழகத்தின் முன்னேற்றம் பற்றியோ, வேலை வாய்ப்பு பற்றியோ மத்திய அரசுக்கு இருக்கும் அலட்சிய மனப்பான்மையை காட்டுகிறது. மத்திய பா.ஜ.க. அரசு, இந்த தொழிற்சாலையை சீர்குலைப்பது வேலை இழப்பு அபாயத்தை ஏற்படுத்தும். ராணுவ சீருடை உற்பத்தி தொழில் நுட்பத்திற்கான பயிற்சி பெறும் அப்ரன்டீஸ் தொழிலாளர்களின் எதிர்காலம் பாழாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே ராணுவ வீரர்களுக்கு ஆவடி சீருடைகள் தயாரிக்கும் தொழிற்சாலை மூலம் தரமுள்ள சீருடைகள் வழங்கும் திட்டத்தை தொடர்ந்திட வேண்டும் என்றும், நாட்டு பாதுகாப்பில் தமிழகத்தின் பங்களிப்பாக இருக்கும் இந்த சீருடை தயாரிக்கும் தொழிற்சாலையை தொடர்ந்து நடத்திட வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீத்தாராமனை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top