கேப்டவுன் 3-வது ஒருநாள் போட்டி: 124 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்தியா அணி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகித்தது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன்பின் தவானுடன், கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர்.

தவான் – கோலி இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் 140 ரன்கள் சேர்த்தது இருந்த நிலையில் தவான் 76 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ரகானே 11 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணி சற்று தடுமாறியது.

அதைத்தொடர்ந்து கோலியுடன், டோனி இணைந்தார். சிறப்பாக விளையாடிய கோலி 119 பந்துகளில் சதம் அடித்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவரின் 34-வது சதமாகும். மேலும் இந்திய கேப்டன்களாக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலிலும் 12 சதங்களுடன் கோலி முதல் இடத்திற்கு முன்னேறினார்.

டோனி 10 ரன்களிலும், அவரை தொடர்ந்து கேதார் ஜாதவ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்தது. புவனேஷ்வர் குமார் 16 ரன்கள், கோலி 160 ரன்கள் (159 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து களத்தில் இருந்தனர்.

தென்ஆப்ரிக்கா அணி பந்துவீச்சில் டுமினி 2 விக்கெட்களும், மோரிஸ், தாகிர், ரபாடா, பெஹலுக்வாயோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

304 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற கடுமையான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தென் ஆப்ரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆம்லாவும, கேப்டன் மார்க்ராமும் களமிறங்கினர். முதலிலேயே அந்த அணியின் ஆம்லாவை அவுட்டாக்கி அதிர்ச்சி அளித்தார் பும்ரா. இதனால் ஒரு ரன்னில் ஆம்லா வெளியேறினார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய டுமினி மார்க்ராமுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அணியின் எண்ணிக்கை 79 ஆக இருக்கும்போது குல்தீப் யாதவ் பந்து வீச்சில் மார்க்ரம் அவுட்டானார். ஓரளவு தாக்குப் பிடித்த டுமினி அரை சதமடித்தார்.

அவரை தொடர்ந்து யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. தென் ஆப்பிரிக்கா வீரர்கள் இந்திய வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறினார். மேலும், குல்தீப் யாதவும் சஹாலும் சிறப்பாக பந்து வீசி தென் ஆப்ரிக்கா வீரர்களை விரைவில் அவுட்டாக்கினர். இதையடுத்து, தென் ஆப்ரிக்கா அணி 40 ஓவர்களில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக ஆடி சதமடித்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் தலா 4 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியுடன் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top