தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா இந்தியா?

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது.

இந்நிலையில், 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், நடந்து முடிந்து உள்ள இரு போட்டிகளிலும் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி கேப்டவுனில் இன்று (7-ந்தேதி) நடக்கிறது.

ஒருநாள் தொடரில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது. இந்திய அணியின் பலமே சுழற்பந்து வீச்சுத்தான். யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சில் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் திணறுகிறார்கள்.

செஞ்சூரியனில் நடந்த 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 118 ரன்னில் சுருண்டது. தென் ஆப்ரிக்காவின் டுமினியை எப்படி வெளியேற்ற வேண்டும் என்பது பற்றி சாஹலிடம் டோனி அறிவுரை வழங்கினார். அதன்படி டுமினியை எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் செய்தார்.

இப்படி சுழற்பந்து வீரர்களுக்கு விக்கெட்டுகளை வீழ்த்த டோனி உதவியாக இருந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

முன்னாள் கேப்டன் தோனி பதவியில் அனுபவம் பெற்ற வீரரான அவர் விக்கெட் கீப்பராக இருப்பதால் பேட்ஸ்மேன்களின் பலம் மற்றும் பலவீனத்தை நன்கு அறிந்தவர். இதனால் எந்த திசையில் பந்து வீசினால் விக்கெட்டை வீழ்த்த இயலும் என்பதில் அவர் உதவுகிறார்.

இதேபோல வேகப்பந்து வீரர்களான புவனேஷ்வர்குமாரும், பும்ராவும் நல்ல நிலையில் உள்ளனர்.

வீரர்களின் காயத்தால் தென்ஆப்பிரிக்கா திணறிவருகிறது. ஏற்கனவே காயம் காரணமாக முன்னணி பேட்ஸ்மேன்களான டிவில்லியர்ஸ், கேப்டன் டுபெலிசிஸ், விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக்க ஆகிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார்.

அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாததால் தென் ஆப்பிரிக்கா நெருக்கடியில் உள்ளது. ஹசிம் அம்லா, எல்கர், டுமினி ஆகியோரது பேட்டிங்கை பொறுத்தே அந்த அணியின் நிலை இருக்கிறது. தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றியை பெறும் ஆர்வத்துடன் அந்த அணி இருக்கிறது.

இரு அணிகளும் நாளை மோதுவது 80-வது போட்டியாகும். இதுவரை நடந்த 79 ஒருநாள் போட்டியில் இந்தியா 31-ல், தென்ஆப்பிரிக்கா 45-ல் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டி முடிவு இல்லை.

இன்றைய ஆட்டம் பகல்- இரவாக நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி சோனி டென், சோனி சிக்சில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top