தமிழகத்தில் தேர்தல் நடைபெறாமலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது: டிடிவி தினகரன்

ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த 264 நாட்களாக அப்பகுதி மக்கள் தொடர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் வழிநடத்தி வருகிறார்.

நேற்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை டிடிவி. தினகரன் சந்தித்து பேசினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், தினகரனிடம் ஒரு பாட்டிலில் தினமும் குடிநீர் கலங்கலாக வருவதை காண்பித்து குறைகளை தெரிவித்தனர். மேலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர்.

அப்போது அவர் “இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். வேளாண் சார்ந்த தொழில்களைத் தவிர வேறு எந்த தொழிலும் இப்பகுதியில் நடைபெறுவதற்கு தடை விதிக்க வேண்டும். மழை பொய்த்ததால், காவிரி நீர் வராததால் விவசாயம் லாபகரமானதாக இல்லை எனக் கருதிவிட வேண்டாம். வருங்காலத்தில் நமக்கு விவசாயம்தான் உலக அளவில் முக்கியத் தொழிலாக இருக்கும்”. டெல்டா மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றார்.

இதன்பின்னர் தினகரன் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்போம். கதிராமங்கலம் மக்களுடன் கடைசி வரை இருப்போம். இந்த மக்களுடன் எங்களது படை துணையாக நிற்கும்.

தமிழகத்தில் தற்போது கமிஷன் ஆட்சிதான் நடக்கிறது. அந்த முகாமில் 6 பேரை தவிர்த்து யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். அந்த 6 பேரும் திருந்தி வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்.

தமிழகத்தில் தேர்தல் நடைபெறாமலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. என்னை நம்பி 18 எம்எல்ஏக்கள் வந்துள்ளனர். எனக்கு முதல்வர் பதவி மீது ஆசையில்லை. ஒருவேளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த 18 பேரில் ஒருவர் கூட முதல்வராகலாம். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில், சசிகலாவுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராவார்’ என்றார்.

இதையடுத்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கூறியதாவது:-

காவிரி படுகை பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சிகள், அமைப்புகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

மத்திய பெட்ரோலிய துறை மந்திரி பேசும் போது, ‘தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை கொண்டு வர மாட்டோம்’ என்று தெரிவித்துள்ளார். ஆனால் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மறைமுகமாக இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் 110 இடங்களில் எரிவாயு எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் 6 மண்டலங்களில் எரிவாயு எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் விவசாயம் மட்டுமன்றி நீராதாரமும் முற்றிலும் அழிந்து விடும்.

மேலும், இந்த திட்டம் தொடர்ந்து நடைமுறை படுத்தப்பட்டால் உணவு தட்டுப்பாடும் ஏற்படும். கதிராமங்கலம் போராட்டத்தை தமிழகம் முழுவதும் முன்னெடுத்து செல்வோம். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top