மணல் குவாரிகளை திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு; மணல் கொள்ளையர்கள் மகிழ்ச்சி

செய்திக்கட்டுரை

 

தமிழகத்தில் பல லட்சகணக்கான ஆண்டுகளாக உருவான இயற்கை வளங்கள் கடந்த 25ஆண்டுகளில் அழிக்கப்பட்டு குற்றுயிரும் கொலையுயிருமாய் கிடக்கின்றன. ஒரு சென்டிமீட்டர் மணல் உருவாக 100 ஆண்டுகள் தேவை என்கிறது இயற்கை பற்றிய அறிவியல். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு இன்று மொட்டைக்காடாக பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது.

 

 

ஆற்றுமணல் கொள்ளை அரசின் ஆசிர்வாதத்தோடு சிறப்பாக அனைத்து தமிழக ஆற்றுக்கரைகளிலும் நடந்தவண்ணம் இருக்கிறது. .ஆற்று மணல் கொள்ளையை எதிர்த்து போராடும் மக்களை இந்த அரசு போலிஸ் உதவியுடன் இரும்புக்கரம் கொண்டு தாக்குகிறது.

 

 

ஆற்றுமணல் கொள்ளையால் நீர் மாசு அடைந்து குடிநீர் பஞ்சம் ஏற்படுகிறது.இதனால் குடிநீர் தனியாரிடம் வாங்கும் நிலை ஏற்பட்டு விட்டது.மக்கள் குடிநீருக்கு பல மைல்தூரம் செல்லவேண்டியுள்ளது

 

 

தமிழ்நாட்டில், அரசே குவாரிகளை அமைத்து மணல் விற்பனை செய்து வருகிறது.இதனால் கொள்ளைபோகும் மணல் ஒருபுறம், அரசு விற்கும் மணல் ஒருபுறம் என வேகமாக மணல் காலியாகி வருகிறது.மணலின் தேவையும் அதிகமாகி வருகிறது மணல் ஏற்றுமதியும் அதிகரித்து விட்டது.

 

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராமையா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு மணலை இறக்குமதி செய்தது. ஆனால் உரிய அனுமதி இன்றி இறக்குமதி செய்ததாக கூறி இந்த மணலை துறைமுகத்தில் இருந்து வெளியில் எடுத்துச் செல்ல தமிழக அரசு தடை விதித்தது.ஏனென்றால் மணல் இறக்குமதிக்கு அனுமதி அளித்தால் இங்குள்ள மணல் விற்பனை குறையும் என்று அரசு கூறுகிறது. இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய அரசு மாறாக விற்பனை செய்யும் கொடுமை தமிழ்நாட்டில் தான் நடக்கிறது

 

 

இதை எதிர்த்து அந்த நிறுவனம் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதங்களுக்குள் மூடவேண்டும் என்றும், புதிதாக மணல் குவாரிகளை திறக்கக்கூடாது என்றும், வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்வதற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் கடந்த நவம்பர் 29-ந் தேதி உத்தரவிட்டார்.

 

 

மேலும், ஒரு நாடு இயற்கை வளங்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்றும்,தமிழ் இலக்கியங்கள், திருக்குறள் இவைகளில் சொல்லப்படும்  கருத்துக்களை மேற்கோள் காண்பித்து [தீர்ப்பு பக் 33,34.] வழங்கி உள்ளார்

 

மேலும், இந்த உத்தரவின் மூலம் மணல் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் மாநில அரசே மணலை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மணல் இறக்குமதியை வரைமுறைப் படுத்துவது தொடர்பாக மாநில அரசு தேவைப்படும்பட்சத்தில் சட்டம் இயற்றலாம் என்றும் அவர் கூறி இருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர், தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி கடந்த மாதம் 19-ந் தேதி மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

மதுரை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் மணல் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிறகு மணல் கடத்தல் வெகுவாக குறைந்து உள்ளது. மேலும் அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் தொழிலக பயன்பாட்டுக்காக மட்டுமே உள்ளது. மேலும் இறக்குமதி நடவடிக்கை மாநில அரசு பிறப்பித்துள்ள விதிகளின் அடிப்படையில் இல்லை. மதுரை ஐகோர்ட்டு மணல் குவாரிகளுக்கு விதித்துள்ள தடையால் தமிழ்நாட்டில் சுமார் 3 லட்சம் வீடுகளின் கட்டுமான பணிகள் முடங்கி உள்ளன. எனவே, மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி மற்றும் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள் வாதாடுகையில், மணல் குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால், தமிழகத்தில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே மணல் குவாரிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், மணல் குவாரிகளை மூடுமாறு மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு இடைக் கால தடை விதித்ததோடு, மணல் குவாரிகளை மூடியதால் என்னென்ன கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன? என்பது பற்றிய விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

அத்துடன், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு மணல் இறக்குமதி நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

நாட்டின் இயற்கை வளத்தை காக்க மணல் குவாரிகளை மூடுமாறு மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து இருப்பது மணல் கொள்ளையர்களுக்கும், இயற்கை வளத்தை விற்பனை பொருளாக பார்க்கும் தமிழக அரசுக்கும் மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது. ஆனால் தமிழக மக்களுக்கு வருத்தத்தை கொடுத்து இருக்கிறது என்பதை  சுப்ரீம் கோர்ட் புரிந்துகொள்ள வேண்டும்

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top