தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

தமிழக அரசு கடந்த 19-ந் தேதி அரசு போக்குவரத்து கழக பஸ்களின் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. 20-ந் தேதி காலை முதல் தமிழகம் முழுவதும் பேருந்து கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது.

இந்த கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் சாலை மறியல், கல்லூரி புறக்கணிப்பு என போராட்டங்களில் இறங்கினர். மாணவர்களின் போராட்டம் அரசுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. மேலும், மாணவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் இறங்கின.

பஸ் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் 27-ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டமும், 29-ந் தேதி மறியல் போராட்டமும் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் அரசு பஸ் கட்டண உயர்வை திரும்பபெறவில்லை. தொடர்ந்து அரசின் இந்த பஸ் கட்டண உயர்வை திரும்பப்பெற கோரி பல காட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழநாட்டில் ஆட்சியில் உள்ள அ.தி.மு.க அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க எதிர்க்கட்சியான தி.மு.க முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில், பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக, அடுத்தகட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். கூட்டத்தில், பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக அடுத்தகட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுத்து அறிவிக்கப்பட இருக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top