தென் ஆப்ரிக்காவை திணறடித்தது இந்தியா; 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வியாழன் அன்று டர்பனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2-வது ஆட்டம் செஞ்சூரியனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

தென்ஆப்பிரிக்கா அணியில் ஆல்ரவுண்டர் பெலுக்வாயோவிற்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி வாய்ப்பளிக்கப்பட்டது மற்றும் டு பிளிசிஸ்க்கு பதிலாக அறிமுக வீரர் கயா சோண்டோ சேர்க்கப்பட்டார்.

இந்திய அணியின் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா அணி 32.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 118 ரன்னில் சுருண்டது.

சாஹல் அபாரமாக பந்து வீசி 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதனை தொடர்ந்து 119 ரான் எடுத்தாள் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, தவான் களம் இறங்கினார்கள். இந்தியாவின் ஸ்கோர் 26 ரன்னாக இருக்கும்போது ரோகிர் சர்மா 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியா 15 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. மேலும் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. அம்பயர்கள் கூடுதலாக 15 நிமிடம் வழங்கினார்கள். அந்த நேரத்திற்குள் இந்தியா 4 ஓவர்கள் விளையாடி 24 ரன்கள் எடுத்திருந்தது.

2 ரன்கள் தேவை என்ற நிலையில் நடுவர்கள் லஞ்ச் பிரேக் என்று அறிவித்தனர். நடுவர்களின் இந்த முடிவு இரு அணிகளுக்கும் திகைப்பையும் குழப்பத்தையும் கொடுத்தது.

கிரிக்கெட் விதிமுறை என்பதால் உணவு இடைவெளிக்கு பிறகே போட்டி தொடங்கியது. அதன்பின் களம் இறங்கிய இந்தியா 20.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தவான் 51 ரன்னுடனும், விராட் கோலி 46 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

5 விக்கெட் வீழ்த்திய சாஹல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி கேப்டவுனில் வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top