சேஸிங் என்றாலே சிறுத்தை அல்லது விராட் கோலிதான்: முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் புகழாரம்

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் டர்பனில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 269 ரன்கள் சேர்த்தது. பின்னர் 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்ககில் இந்தியா களம் இறங்கியது. விராட் கோலியின் அபார சதத்தால் (112) இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்ஆப்பிரிக்கா மண்ணில் விராட் கோலியின் முதல் சதம் இதுவாகும். சேஸிங்கில் அவரது 18-வது சதம் இதுவாகும். விராட் கோலியின் 33-வது சதம் இதுவாகும்.

அவரது ஒட்டுமொத்த 33 சதங்களில் 20 சதங்கள் 2-வது பேட்டிங் செய்கையில் எடுக்கப்பட்டவை ஆகும். அவற்றில் 18-ஐ வெற்றியாக மாற்றியிருக்கிறார். இலக்கை வெற்றிகரமாக துரத்திப்பிடித்த (சேசிங்) வகையில் அதிக சதங்கள் அடித்தவர் கோலி தான். இந்த வரிசையில் சச்சின் தெண்டுல்கர் (14 சதம்) 2-வது இடத்தில் இருக்கிறார்.

கோலியின் ஆட்டத்தை முன்னாள் வீரர்கள் வியந்து பாராட்டியுள்ளனர்.

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அக்தர் தனது டுவிட்டர் பக்கத்தில்

‘‘விராட் கோலியின் சூப்பரான மற்றொரு ரன் சேஸ். சேஸிங் என்று வரும்போது விராட் கோலி அல்லது சிறுத்தைதான். இளம் வீரர்கள் விராட் கோலியை ஆட்டத்தை பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன்’’ என்று பதிவு செய்துள்ளார்.

மேலும், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சேசிங்’ செய்வதில் கோலி சிறந்தவர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார். நான் பார்த்தவரை ‘சேசிங்’ செய்வதில் கில்லாடி விராட் கோலி தான்’ என்று பதிவு செய்துள்ளார்.

இவர்களை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமண் தனது பதிவில்

‘இது ஒரு அற்புதமான சேசிங். தான் விளையாடிய ஒவ்வொரு நாட்டிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார். அதுவும் நெருக்கடியான இந்த போட்டியில் சதத்தை அலட்டிக்கொள்ளாமல் எட்டியது போல் தெரிந்தது’ என்று கூறியுள்ளார். ‘உலக கிரிக்கெட் அரங்கில் சேசிங் செய்வதில் ராஜாவாக கோலி திகழ்கிறார்’ என்று முன்னாள் வீரர்கள் ஹேமங் பதானி, முகமது கைப் புகழாரம் சூட்டியுள்ளார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top