தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி அபார வெற்றி; விராட் கோலி சதம்

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா அணியிடம் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் டர்பனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

டி காக், ஹசிம் அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 16 ரன்கள் எடுத்த நிலையில் அம்லா பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து கேப்டன் டு பிளிசிஸ் களம் இறங்கினார் மறுமுனையில் டி காக் களத்தில் இருந்தார். பின் டி காக் 34 ரன்களில் சாஹல் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

அதன்பின் களமிறங்கிய வீரராகள் மார்கிராம் (9), டுமினி (12), மில்லர் (7) அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.அணியின் தடுமாற்றத்தை உணர்ந்த கேப்டன் டு பிளிசிஸ் நிலைத்து நின்று சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினர். அவருக்கு கிறிஸ் மோரிஸ் (37) துணை நின்றார்.

தென்னாப்ரிக்கா அணி கடைசி 5 ஓவரில் 46 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய டு பிளிசிஸ் 47-வது ஓவரின் 2-வது ஒரு ரன் அடித்து 101 பந்தில் சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 112 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 120 ரன்கள் சேர்த்தார்.

50 ஓவர்களின் முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்தது.

அதைத்தொடர்ந்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அதன்பின் தவானுடன், கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்திய அணியின் ஸ்கோர் 67 ஆக இருந்த பொழுது ஷிகர் தவான் ரன் அவுட் ஆனார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரகானே, கேப்டன் விராட் கோலியுடன் சேர்ந்து இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து எதிர்முனையில் சிறப்பாக விளையாடிய ரகானே மற்றும் விராட் கோலி அரைசதம் அடித்தனர்.

இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தென்னாப்ரிக்கா பந்துவீச்சாளர்கள் திணறினர். 41-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்த கோலி சதத்தை பூர்த்தி செய்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் 33-வது சதமாகும்.

சிறப்பாக விளையாடிய ரகானே 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.அதன்பின் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். விராட் கோலி 112 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் டோனி களமிறங்கினார்.

வெற்றி ரன்களை டோனி அடித்தார். இந்திய அணி 45.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வருகிற 4-ம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top