வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை; நடுத்தர மக்களை ஏமாற்றும் வகையில் பட்ஜெட்

தனிநபர் வருமானவரி விலக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் அல்லது ரூ.5 லட்சம் வரை அதிகரிக்கப்படும் என நடுத்தர வர்கத்தை சார்ந்த குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில், மிகப்பெரிய ஏமாற்றத்தை மத்திய அரசு அளித்துள்ளது.

2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து வருகிறார்.

பட்ஜெட்டை குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது:-

2018-19ம் நிதி ஆண்டில் தனிநபர் வருமானவரி உச்ச வரம்பில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு இருந்தமுறையே தொடரும் என்று தெரிவித்தார்.

மாத ஊதியம் பெறுபவர்களுக்கு வருமானவரி விலக்கு உச்ச வரம்பு என்பது ரூ.2.5 லட்சமாக நீடிக்கும் அதில் எந்த மாற்றமும் இல்லை. அதாவது, ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்குள் வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை.

ரூ. 2.50 லட்சம் மேல் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் அதாவது, ஆண்டுக்கு ரூ. 2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஊதியம் பெறுபவர்கள் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும். 5 லட்சம் முதல் ரூ.10லட்சம் வரை ஊதியம் பெறுபவர்கள் 20 சதவீதம் வரியும், 10 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இந்த வரிவிதிப்பு முறை நடுத்தர குடுமபத்தை சேர்ந்த மக்களை பெரிதும் பாதித்தது.

ஆனால், சில மாதங்களுக்கு முன் 7-வது ஊதியக்குழுவில் ஊதியம் உயர்த்தப்பட்டு இருப்பதால், மக்களின் செலவு செய்யும் அளவு அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டது. இதன்படி, வருமானவரி விலக்கு அளவு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும் என நடுத்தர மக்கள் எதிர்பார்த்தனர். அவ்வாறு உயர்த்தப்பட்டால், வருமான வரி செலுத்தும் ஏறக்குறைய 75 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.

ஆனால், அத்தகைய அறிவிப்பு ஏதுமில்லாததால் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துவிட்டது. மேலும், இந்த அறிவிப்பு நடுத்தர மக்களின் அன்றாட வாழக்கையில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top