பஸ் கட்டண உயர்வு; நிர்வாக திறமை இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது – விஜயகாந்த் கண்டனம்

தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்களின் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது. இந்த கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் இறங்கின.

தே.மு.தி.க. சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து நேற்று சென்னை, பல்லாவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமை தாங்கினார்.

நேற்று ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:-

நான் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக அரசு பஸ்சில் உங்களுக்காகத்தான் வந்தேன். ஆலந்தூரில் இருந்து திரிசூலம் வருவதற்கே பஸ் கட்டணம் மிக அதிகமாக உள்ளது. மக்கள் எல்லாரும் வேதனையில் இருக்கின்றனர். பஸ் பயணத்துக்கு அதிக செலவு செய்ய மக்கள் எங்கே போவார்கள்.

பஸ் கட்டண உயர்வால் தமிழக மக்கள் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தற்போது அரசு பஸ்களில் செல்ல தயங்குகின்றனர். ரெயில்கள், தனியார் வாகனங்களை தான் தேர்வு செய்கின்றனர்.

மதுரைக்கு ரூ.700 கொடுத்து டிக்கெட் எடுப்பதற்கு பதிலாக ரூ.500 அபராதம் செலுத்திவிட்டு செல்லலாம் என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. அந்த அளவுக்கு பஸ் கட்டண உயர்வு மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. பஸ் கட்டணத்தை அதிக அளவு உயர்த்தி விட்டு கண் துடைப்பாக குறைத்து உள்ளனர்.

மக்களுக்கு இடையூறு செய்யாமல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துங்கள். பல்வேறு பிரச்சினைகளுக்காக சில அரசியல் கட்சிகள் சாலை மறியல், ரெயில் மறியல் செய்கிறார்கள். இதெல்லாம் வேண்டாம்.

நான் லஞ்சம் வாங்கமாட்டேன். மக்களுக்கு இடையூறு இல்லாமல் இருப்பது தான் என் அரசியல். நிர்வாக திறமை இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. ஆட்சி நடத்த தெரியாவிட்டால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பதவியை விட்டு சென்று விடுங்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது பஸ் கட்டணத்தை குறைக்கக்கோரி தே.மு.தி.க.வினர் கோஷங்கள் எழுப்பினர். மேலும், இந்த ஆர்ப்பாட்டம் இத்துடன் நிற்காது. மக்களுக்காக தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top