காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி டெல்டா மாவட்டங்களில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் ரெயில் மறியல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரை காப்பாற்ற கர்நாடக மாநிலத்தில் இருந்து  தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரை உடனடியாக குறைந்தபட்சம் 15 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு தி.மு.க, ம.தி.மு.க, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு விவசாயிகள், அரசியல் கட்சியினர் நேற்று திரண்டனர்.

இதில் ம.தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், விவசாய சங்க தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

ரெயில் நிலையத்தை அடைந்த போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அப்போது அய்யாக் கண்ணு உள்பட சில விவசாயிகள் தரையில் படுத்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.

பின்னர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் ஈடுபட்டனர், இதையடுத்து ஜி.ராமகிருஷ்ணன் உள்பட 175 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, தஞ்சையில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தேர்தல் பணிக் குழு தலைவர் எல்.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்சியில் இருந்து சென்னை சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வைகோ தலைமையிலான 187 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரத்தில் விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சியினர் நேற்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 94 பேர் கைது செய்யப்பட்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகில் விவசாய சங்கத்தினர், அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மதிவாணன் எம்.எல்.ஏ., உள்பட 220 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறையில் சோழன் எக்ஸ்பிரசை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூரில் எர்ணாகுளம்- காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்பட 600 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்ட எம்.எல். ஏ.க்கள் அன்பழகன், கோவி.செழியன் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top