வஜிப்-தாயகம் பற்றியான, தாயகத்தினுடனான உரையாடல்/ Wajib (Duty)

உலகத்திரைப்படங்கள் –திரைப்பட விமர்சனம்

 

 

இந்த ஆண்டு கேரள சர்வதேச திரைப்பட விழாவின் சர்வதேச பிரிவில், சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்ட படம், வஜிப் (97 நிமிடங்கள்). (பெண்) இயக்குனர் ஆன்னிமேரி ஜாஸிர் (Annemarie Jacir) இயக்கிய பாலஸ்தீனிய படமான வஜிப், இஸ்ரேல் கட்டுப்பாட்டிலுள்ள பாலஸ்தீனிய நகரமான நாசேரேத்தை கதைக்களமாக கொண்டது.

 

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை சகித்து வாழப் பழகும் பழமைவாத குணமுடைய ஆசிரியர் அபு ஷாடிக்கும் (Abu Shadi) பாலஸ்தீனியத்திற்கு வெளியே இத்தாலியில் வசிக்கும் அவர் மகன் ஷாடிக்கும் (Shadi) இடையேயான உரையாடலே, திரைக்கதை. இருவருக்கிமிடையேயான உரையாடல் இஸ்ரேலின் ஆதிக்க கரங்களுக்குள் சிக்கியுள்ள பாலஸ்தீனிய நகரமான நாசேரத் நகரத்தின் ஊடே நிகழ்த்தப்படுகிறது.

 

தங்களது இல்ல திருமண நிகழ்வின் அழைப்பிதழை, தங்களது உற்றார், உறவினர்களுக்கு நேரில் சென்று கொடுத்து, அவர்களை திருமண நிகழ்விற்கு அழைப்பது பாலஸ்தீனியர்களின் பண்பாடு. அதன் அடிப்படையில், நாசேரத்தில் நிகழயிருக்கும் தன் தங்கையின் திருமனத்திற்கான அழைப்பிதழ்களை தங்களது உற்றார், உறவினருக்கு கொடுக்கும் கடமைக்காகவும் (Wajib- Duty), தன் தங்கையின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காகவும் இத்தாலியிலிருந்து நாசேரத்திற்கு வரும் ஷாடியும் மற்றும் அவர் தந்தையும் இனைந்து,  நாசேரத் நகரத்தில் பல்வேறு இடங்களில் வசிக்கும் தங்களது உற்றார், உறவினர்களுக்கு அழைப்பிதழ்களை விநியோகிக்க பயனிக்கின்றனர்.

 

அழைப்பிதழ் கொடுக்கச் செல்லும் இடங்களில் உறவினர்களுக்கும் அபுஷாடி/ ஷாடிக்கும் இடையேயான நலவிசாரிப்புகள், கடந்தகால/ நிகழ்கால சம்பவங்களைப் பற்றியான உரையாடல்கள் சிரிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும், அதே நேரத்தில் இஸ்ரேலிய அடக்குமுறைக்குள் பாலஸ்தீனியர்கள் வாழும் வாழ்க்கையப் பற்றிய அரசியலை பார்வையாளருக்கு கடத்தக்கூடியதாகவும் இருக்கின்றன. பயனத்தின் போது அபுஷாடிக்கும், ஷாடிக்குமிடையே நடக்கும் உரையாடல்கள் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட ஒரு தேசத்தின் இரு தலைமுறையினருக்கான உரையாடல்களாக உள்ளது.  அழுத்தமான கதையாடல்களை மிகவும் நகச்சுவையுடன்  நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். நாம் சிரிக்கும் அதே நேரத்தில், படம் உணர்த்தும் பாலஸ்தீனிய  அரசியல் நம் மனதை தைக்கிறது.

 

ஒரு உறவினர் வீட்டில் வளர்க்கும் கிளி, ஷாடியின் கழுத்தில் அமர்கிற  பொழுது, அதன் வளர்ப்பாளரான உறவினர் கிளி தொந்தரவு ஏதும் செய்யாது என ஷாடியிடம் கூறுவார். அவர்கள் இயல்பாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது கிளி ஷாடியை கடித்துவிடும், அப்போது அந்த உறவினர்,’தனக்கு யாரை பிடிக்கவில்லையோ அவர்களை (கிளி) கடித்துவிடும்’ என கூறும்  காட்சி, தன் உறவினர்களிடம் கட்டடக்கலைஞரான ஷாடியை மருத்துவரென்றும், இத்தாலியில் வசிக்கக்கூடியவரை அமெரிக்காவில் வசிப்பதாகவும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அபு ஷாடி கூறியதன் அடிப்படையில், தங்கள் வீட்டிற்கு வரும் ஷாடியிடம்,  அபுஷாடி கூறியிருந்த ‘மருத்துவ, அமெரிக்க’ வாழ்க்கையைப் பற்றி உறவினர்கள் கேட்கும்பொழுது ஷாடியும், அபுஷாடியும் சமாளிக்கும் காட்சி, தன் பழைய தோழிக்கு (!) அழைப்பிதழை கொடுத்துவிட்டு  வரும் ஷாடியின் கன்னத்தில் தோழி கொடுத்த முத்தத்தின் லிப்ஸ்டிக் தடயத்தை ‘தொடச்சிக்கச்’ சொல்லி அபுஷாடி கூறும் காட்சி போன்ற, அழைப்பிதழை வழங்கச் செல்லும் இடங்களில் நடக்கக்கூடிய கலகலப்பான சம்பவங்கள் பார்வையாளர்களுக்கு சிரிப்பை வரவழைக்கின்றன.

 

அதேசமயத்தில்,உறவினருடன் இல்லாத அவர் மகனின் குடும்பத்தைப் பற்றி அபுஷாடி விசாரிக்கும் பொழுது, தன் மருமகள் நாசேரத் குடியிருப்புக்காக வின்னப்பித்து கிடைக்காததால், நகரத்திற்கு வெளியே வசிப்பதாக உறவினர் கூறுவது, சமூக வலைத்தளத்தில் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாக கருத்திட்டால் இஸ்ரேலிய படை கைது செய்யுமா என்று வயதான பெண்மனி ஒருவர் ஷாடியிடம் கேட்கும் காட்சி, குப்பைத் தொட்டியில் குப்பை அகற்றப்படாத குப்பைப் பற்றி ஷாடி கேட்கும் பொழுது, இங்கு குப்பைத் தொட்டியாவது இருக்கிறதே என அபுஷாடி கூறுவது, இன்னும் இத்தாலி குடியுரிமை கிடைக்காததால் தன் தங்கையின் திருமனத்திற்கு தன் காதலி வர இயலவில்லை என ஷாடி கூறுவது போன்ற காட்சிகள் நாசேரத்தில் இரண்டாம் தர குடிமக்களாக வாழும் பாலஸ்தீனியர்களின் வாழ்க்கையைப் பற்றியும், புலம்பெயர் நாட்டில் பாலஸ்தீனியர்கள் குடியுரிமையற்று வாழும் அரசியலையும்  நமக்கு விளக்குகின்றன.

 

படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளில் பாலஸ்தீனிய அரசியலை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

பாலஸ்தீனிய விடுதலைக் கருத்தியல் தாக்கம் கொண்ட ஷாடி, தன்  இளம் வயதில் நன்பர்களுடன் இனைந்து (அரசியல்) திரைப்படங்களை திரையிட்டுப் பார்க்கும் குழுவாக இயங்கியவர். இஸ்ரேலிய உளவுத்துறையுடன் தொடர்புடைய அபுஷாடியின் நன்பர் ஒருவர், அபுஷாடியின் வீட்டிற்கு வந்த மறுநாள் இஸ்ரேலிய காவல்துறை அபுஷாடியின் வீட்டிற்கு வருகிறது. தன் தந்தையினுடைய நண்பரின் வருகையே இஸ்ரேலிய காவல்துறையின் அச்சுறுத்தலுக்கு காரனம் என தன் தந்தையின் நண்பர் மீது ஷாடி கோபமாக இருக்கிறார். அந்நண்பர் அபுஷாடிக்கு தந்த ஆலோசனையின் பேரில், ஷாடி நாசரேத்திலே தொடர்ந்து இருந்தால், ஷாடியின் அரசியல் சார்பு மேலும் பிரச்சனையை தீவிரமாக்கக்கூடும் என ஷாடியை இத்தாலிக்கு அனுப்பி வைக்கிறார் அபு ஷாடி. இஸ்ரேலிய உளவாளியான அந்நண்பருக்கும் திருமன அழைப்பிதழை கொடுக்க, ஷாடியை அழைக்கிறார் அபுஷாடி. ஆனால் பாலஸ்தீனியத்திற்கு எதிராக செயல்படும் இஸ்ரேலிய ஆதரவுடைய நபருக்கு தன் தங்கையின் அழைப்பிதழை கொடுக்கக்கூடாது என கூறும் ஷாடி, அந்நபரின் ஆலோசனையில் பேரில் அபுஷாடியின் வற்புறுத்தலே தான் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற காரனம், பாலஸ்தீனத்தில் பாலஸ்தீனியர்கள் இல்லாமல் ஆக்குவதே அவர் எண்ணம் என கூறுகிறார். ஆனால் அபுஷாடியோ அந்நண்பர்தான், இஸ்ரேலிய காவல்துறையின் நெருக்கடிக்கு உள்ளாகயிருந்த தன் மகனை காக்க உதவியவர் என வாதிடுகிறார். கோபமுற்ற ஷாடி காரிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பிக்க, அந்நண்பருக்கு அழைப்பிதழ் கொடுக்க கோபத்துடன் காரை இயக்குகிறார் அபுஷாடி. கார் நகர்ந்த சிறிது தூரத்திலே, இஸ்ரேலியருக்கு சொந்தமான நாயொன்று அபுஷாடியின் காரில் அடிப்பட்டு விடுகிறது. திடிரென்று ஏற்பட்ட விபத்து சத்தத்தின் காரனமாக காருக்கு அருகில் ஓடி வரும் ஷாடி அடிப்பட்ட நாயை நெருங்கி தொட்டுப் பார்க்கிறார், ஆனால் பதட்டமடைந்த அபுஷாடியோ ஷாடியை காரில் ஏறும்படியும், உடனடியாக இந்த இடத்தைவிட்டு கிளம்ப வேண்டுமென்கிறார். தன் தந்தையின் திடீர் பதட்டத்தை கண்ட ஷாடி ஏன் என்ன பிரச்சனை என்று கேட்கிறபொழுது,” பிரச்சனைதான், நாசேரத்திலே நாய் விபத்துகுள்ளாக்கப்பட்டால் பிரச்சனைதான், அதுவும் இஸ்ரேலியருக்குச் சொந்தமான நாயென்றால் பிரச்சனை மிகப்பெரியது” எனக் கூறி அவசரமாக காரைத் திருப்பி,  பிரமாண்ட ஜியோனிஸ அடையாள ஸ்தூபம் நிறுவப்பட்டுள்ள சாலையில் பயனிக்கிறது!

 

மற்றொரு காட்சியில் ஆக்ரமிப்பிற்கு எதிரான பாலஸ்தீனியர்களின் இயல்பான மனநிலையை காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர்.

 

ஒரு உறவினருக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக, இடப்பற்றாக்குறையுடைய நெருக்கடி மிகுந்த இடத்தில், வழியை ஆக்கிரமித்து தங்களது காரை அபுஷாடி நிறுத்திவிட்டுச் செல்வார். அதனை அருகிலிருக்கும் சிறுமி பார்த்துக் கொண்டிருப்பாள். அபுஷாடி திரும்ப காரை எடுக்க வரும் பொழுது, காரின் டயர் பஞ்சராக்கப்பட்டு, ஆக்கிரமிப்பைக் கண்டித்து எழுதப்பட்ட செய்தி காரில் வைக்கப்பட்டிருக்கும். அருகிலிருந்த சிறுமியிடம் ,”யார் இந்த செயலை செய்தது?” என அபுஷாடி கேட்கும் பொழுது, அந்த சிறுமி ‘நிகழ்த்தப்பட்ட சம்பவம் சரியென்பதை’ ஆமோதிக்கும் விதமாக சிரித்துவிட்டு ஒடி விடுவாள்!

 

இது போன்ற  இயல்பான ’புறவெளி பாலஸ்தீனிய அரசியலை’ விவரிக்கும் அதே வேளையில், ஆக்கிரமிப்பு ஒடுக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்டத்தின் மூலம்  புரட்சிகர சமூக மாற்றத்தை நோக்கி நகரும், ஒடுக்கப்பட்ட மக்களின் ‘அகவெளி பாலஸ்தீனிய அரசியலையும்’ படம் விவரிக்கிறது. புற/ அக வெளி என இரண்டும்  Parallel Linear ஆக பயனிக்கின்றன. ஆசிய சமூக குடும்ப அமைப்பு முறைகளின் இயல்பான தன்மையாகயிருக்கும், அன்னோன்யமான உரையாடல்களற்ற ஆனால் அவ்விதமான உரையாடல்களை நிகழ்த்த விரும்பும் தந்தை மற்றும் மகன்களைப் போன்றே இருக்கக்கூடிய அபுஷாடிக்கும், ஷாடிக்கும், அழைப்பிதழ்களை விநியோகிக்க பயனிக்கும்  ஒரு முழு நாள்  கார் பயனம், உரையாடல் வெளியை உருவாக்கித் தருகிறது.

 

விடுதலைப்போராட்டத்தின்பால் தாக்கம் கொண்ட இளைய தலைமுறையின் புரட்சிகர சமூக மாற்றத்தை, மூத்த தலைமுறை ஏற்றுக்கொள்வதில் தடுமாறும் அகவெளியையும் ‘வஜிப்’ காட்சிப்படுத்தியிருக்கிறது.  தன் குடும்ப நலன் மற்றும் சமூக அந்தஸ்து என பழமைவாத சிந்தனைப் போக்குடன் வாழும் அபுஷாடி, குழுவாக சேர்ந்து அரசியல் சினிமாக்களை திரையிட்டுப் பார்க்கும் மகனின் தேச விடுதலை ஈடுப்பாட்டை ‘வேலையற்றவனின் செயலாகப்’ பார்க்கிறார்.  அபுஷாடிக்கும், ஷாடிக்கும் ‘இஸ்ரேலிய உளவாளியாக இருக்கக்கூடிய நபருக்கு அழைப்பிதழ் கொடுப்பது’ தொடர்பாக எழும் வாதத்தில், ’பாலஸ்தீனியர்களை இந்நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக வேலை செய்யும்’ அந்நபருக்கு கொடுக்கக்கூடாதென ஷாடி வாதிடும் பொழுது,  Palestine Liberation Organization- PLO ன் செயற்பாட்டாளாராக இருக்கும்  ஷாடியின் காதலியான நடாவின் தந்தை, பாலஸ்தீனிய விடுதலை செயற்பாட்டாளர் என்ற பெயரில் உலகெங்கிலும் சுற்றி சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும், வெளிநாட்டில் அவருக்காக செலவிடும் பணத்தில், அகதி முகாம்களுக்கான செலவை செய்யலாம் என அபுஷாடி வாதிடுகிறார்.

 

அபுஷாடியோ பாலஸ்தீனிய விடுதலை சார்ந்து செயல்படும் தன் காதலி நடாவின் தந்தையை ஆளுமையாகப் பார்க்கிறார். விடுதலைக்கான சமூக மாற்றத்தை ஏற்றுக்கொள்வதில் நிகழும் அகவெளி பாலஸ்தீனிய அரசியல் உரையாடல், பால்ஸ்தீனியர்களின் இடப்பெயர்வு பாலஸ்தீனியர்களுக்குள் ஏற்படுத்தியிருக்கும் அகச் சிக்கல்களையும் பற்றியும் விவரித்திருக்கிறது.

 

ஷாடியின் தாய், வேறொருவரை திருமணம் செய்து கொண்டு, பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறி, அமெரிக்காவில் வசிக்கிறார். அதன்பின் அபுஷாடி தன் மனைவியுடன் தொடர்புகள் ஏதுமற்று இருக்கிறார். ஆனால் ஷாடி தன் தாயுடன் தொடர்பிலேயே இருக்கிறார். தன் மகளின் திருமணத்திற்காக அமெரிக்காவிலிருந்து, நாசேரத் வரயிருக்கும் ஷாடியின் தாய் பற்றியும் இருவருக்குள்ளும் உரையாடல் நிகழ்கிறது. தன் தாயின் முடிவை ஷாடி ஏற்றுக்கொள்வதும், தன் மனைவியின் செயலை அபுஷாடி ஏற்றுக்கொள்ளாத தன்மையும் இருவருக்குமான பிரதான முரண்பாட்டை நமக்கு விளக்குகின்றன. ஷாடியின் தாய் பற்றிய உரையாடல்கள் மட்டுமே திரைப்படத்தில் இடம்பெறுகிறது, “நாசேரத் நகர்தான்  திரையில் காட்டப்படாத தாய்” என தன்னுடைய ஒரு பேட்டியில் இயக்குனர் குறிப்பிடுகிறார். தன் மனைவி மற்றும் மகனை பிரிந்து வாழும் அபுஷாடி, தற்போது மகளின் திருமனத்தின் மூலம் அவளையும் பிரிய இருக்கிறார். ஆகையால் ஷாடிக்கு ஒரு நாசேரத் பெண்ணை திருமனம் செய்து வைத்து, ஷாடியை நாசேரத்தில் தன்னுடன் இருக்க வைப்பதற்கு உரையாடுகிறார்.

 

ஷாடியாக நடத்திருக்கும் ஷலே பக்ரியும், தந்தையாக நடித்திருக்கும் முகம்மது பக்ரியும் உண்மையான தந்தை மற்றும் மகன் ஆவர். இயக்குனரின் முந்தைய படமான  ”When I Saw you (2012)”ல் ஷலே பக்ரி பால்ஸ்தீனிய விடுதலைப் போராளியாக நடித்திருப்பார். முகம்மது பக்ரியும், நடிகர் மற்றும் இயக்குனர். வஜிப் படத்திற்காக முகம்மது பக்ரியும், ஷலே பக்ரியும் பல்வேறு சர்வதேச விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, விருது பெற்றுள்ளனர். அரேபிய தேசத்தின் தன்மையை தனது ஒளிப்பதிவின் மூலம் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர், அண்ட்யோனி ஹெப்ர்லி.

’உற்றார், உறவினருக்கு அழைப்பிதழ் கொடுக்கும்’ பண்பாட்டின் மூலம் பாலஸ்தீனிய (ர்களின்) அரசியலை மிக நேர்த்தியாக திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குனர்.

இயக்குனர் ஆன்னிமேரி ஜாஸிர்

இது இயக்குனரின் மூன்றாவது திரைப்படம். இந்தப் படத்தைப் போலவே இதற்கு முந்தைய ‘When I Saw you” திரைப்படமும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றிருக்கிறது. பாலஸ்தீனியர்கள் கலைப் படைப்புகள் மூலம் உலக மக்களோடு தங்களுக்கான விடுதலை அரசியல் பேசுவதை ஒரு யுக்தியாக வைத்துள்ளனர். பல்வேறு நாடுகளில் வாழக்கூடிய பாலஸ்தீனியர்கள், தங்களின் பலதரப்பட்ட சிவில் சமூக அமைப்புகள் மூலம் அந்தந்த நாட்டு மக்களிடம் பாலஸ்தீனிய விடுதலைக்கான ஆதரவு தளத்தை உருவாக்குகின்றனர். ஆஸ்கர் போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் பாலஸ்தீனியர்களின் படம் பங்குப்பெறுவது பற்றி இயக்குனர் ஆன்னிமேரி ஜாஸிரிடம் கேட்ட பொழுது,” குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பாலஸ்தீனியர்கள் போராட்டம் மைய விவாதித்திற்குள் வருகிறது, ஆனால் இது உலகளவில் பாலஸ்தீனியத்திற்கு ஆதரவான பெரிய மாற்றத்தை உருவாக்கியிருக்கிறதாவென்று தெரியவில்லை . ஆதிக்க சக்திகள் எங்களின் குரலை, எங்களுக்கான ஆதரவு குரல்களை அழிக்கும் வேலைகளை செய்கின்றன. அதுப்போன்ற சமயங்களில் சர்வதேச திரைப்பட விழாக்களில் பாலஸ்தீனிய படங்களை திரையிடுவதன் மூலம், அதன் பார்வையாளர்களிடம் பாலஸ்தீனைப் பற்றி உரையாட முடிகிறது. இதனைக் கேட்கும் வாய்ப்புள்ள இஸ்ரேலியரையும் எங்களது ஆதரவு தளத்தில் பினைக்க முடியும்” என கூறும் ஆன்னிமேரி ஜாஸிர், தன் படங்களில் பேசப்படும் அரசியல் பற்றிய கேள்விக்கு,” சினிமா மூலம் நமது கதையைச் சொல்கிறோம், மனிதத்தை சொல்கிறோம். நாம் அரசியல் உலகத்தில் வாழ்வதால், என் கதையும் அரசியல் பேசுகிறது. எல்லாப் படங்களிலும் அரசியல் இருக்கிறது. குப்பை ஹாலிவுட் படங்கள் (Stupid Hollywood films) கூட அரசியல் தான்” என்கிறார். ஆன்னிமேரி ஜாஸிரின் பேட்டி:  https://www.youtube.com/watch?v=0RPyVG6msgg

 

பாலஸ்தீனிய விடுதலைக்காக இயங்கும் பாலஸ்தீனியர்களின் 170 சிவில் சமூக அமைப்புகளும் உலகளவில் மேற்கொண்ட “(இஸ்ரேலை) புறக்கணி, தடை செய், (இஸ்ரேலில்) முதலீடுகள் செய்யாதே ‘Boycott, Divestment and Sanctions’ (BDS) campaign  என்ற பிரச்சாரத்தின் விளைவாக, பல உலக நாடுகளால் இஸ்ரேலை தனிமைப்படுத்துகின்றன என்பது குறிப்பிடதக்கது.

வஜிப் படத்தின் ட்ரைலர்: https://www.youtube.com/watch?v=FBDINbuzQRg

படம் பற்றிய இயக்குனரின் உரையாடல்: https://www.youtube.com/watch?v=j-2DtZ4IOhU

https://www.youtube.com/watch?v=B2CnutECy2A

 

பாலாஜி தியாகராஜன்

 


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. It’s easy to start: Sign up in 30 seconds – Complete a brief interactive course for beginners – Select one of our out-of-the-box strategies – Practice in a demo account – Fund your account with your preferred payment method – Trade with high payouts. $ 153 770 Paid to our traders yesterday. Register now and get 10.000 virtual FUNDS in case of right forecast! This is FREE! далее тут 29nzo.tk

Your email address will not be published.

Scroll To Top