பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறவில்லை என்றால் சாலைமறியல், சிறை நிரப்பும் போராட்டம் நிச்சயம்: தி.மு.க. எச்சரிக்கை

நேற்று சென்னை அண்ணா அறிவாயத்தில் அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 1,000 பேர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர்கள் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இன்றைக்கு தி.மு.க. தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது, இந்த இயக்கம் இருந்தால் தங்களுடைய எண்ணங்களை, சதிகளை நிறைவேற்ற முடியாது என்று யார் யாரோ என்னென்னவோ சதிகளை எல்லாம் திட்டமிட்டு செய்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய சதி வலையில் சிக்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் சேர்த்து நான் சொல்ல விரும்புவது, எப்படிப்பட்ட தீயசக்தியாக, எத்தனை பெரிய கொம்பனாக இருந்தாலும், யாராலும் இந்த திராவிட இயக்கத்தை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.

தி.மு.க. இன்றைக்கு ஆளும் கட்சியாக இல்லாவிட்டாலும், விரைவில் ஆளும் கட்சியாகும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. இப்போது நான் எதிர்க்கட்சித் தலைவன். ஆட்சியின் தலைவராக இருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், இரண்டையும் ஒன்றாகவே கருதி, இந்த நாட்டுக்காக உழைக்கும் உன்னதமான இயக்கம் தான் தி.மு.க.

இயக்கத்தை வேரோடு அழிக்க நினைப்பவர்கள் எல்லாம் அழிந்தொழிந்த வரலாறு தான் இருக்கிறதே தவிர, கழகத்தை என்றைக்கும் அழிக்க முடியாதது.

அ.தி.மு.க.வின் 18 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிகளைப் பறித்த வழக்கில் விசாரணை முடிவுற்று, விரைவில் தீர்ப்பு வர இருக்கிறது. எனவே இன்னும் ஒரு வாரகாலத்தில் நாம் எதிர்பார்க்கின்ற தீர்ப்பு நிச்சயம் வரப்போகிறது.

அந்தத் தீர்ப்பு வந்தவுடன், மாதக்கணக்கிலோ, வாரக்கணக்கிலோ அல்ல, நாட்கணக்கில் இந்த ஆட்சி கவிழப்போவது உறுதி.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி எப்படி நள்ளிரவில் உத்தரவிட்டாரோ, அதைவிடவும் கொடுமையாக இன்றைக்கு தமிழ்நாட்டில் நடைபெறும் ‘குதிரை பேர’ ஆட்சி இப்படி பஸ் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது.

மக்களுக்கு சேவை செய்யும் துறையான போக்குவரத்துத்துறையில் என்னதான் இழப்புகள் ஏற்பட்டாலும், எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டாலும், அதுபற்றி எல்லாம் கவலைப்படக்கூடாது. கருணாநிதி 5 முறை முதல்-அமைச்சராக இருந்த நேரங்களில், சிலமுறை பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கலாம் என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால், மக்கள் ஏற்கும் வகையில், அவர்களால் தாங்கக்கூடிய அளவில் தான் உயர்த்தி இருக்கிறோமே தவிர, யாருக்கும் தெரியாமல், முன்கூட்டியே அறிவிக்காமல், பலமடங்கு அதிகரித்ததில்லை.

உடனடியாக பஸ் கட்டண உயர்வை நீங்கள் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், 27-ந் தேதியோடு தி.மு.க.வின் போராட்டம் நின்றுவிடாது. அடுத்து, 28, 29 ஆகிய தினங்களில் மறியல் போராட்டமாக, சிறை நிரப்பும் போராட்டமாக நிச்சயம் தொடரும் என்ற எச்சரிக்கையை தெரிவிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top