பெட்ரோல், டிசல்களையும் ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வர முயற்சி: பெட்ரோலிய துறை அமைச்சர்

பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து மத்திய அரசு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். விலையை கட்டுக்குள் கொண்டு வர எந்த வித முயற்சியும் பா.ஜ.க அரசு மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டிவிட்டது, மக்களை தொடர்ந்து மத்திய அரசு நசுக்கி வருகிறது. நுகர்வோர்களுக்கு விரோதமாக நடந்து வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடன் வாங்கும் அளவு, பங்குகளை விற்பனை செய்தல், நிதிப் பற்றாக்குறை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி ஆகியவை குறித்தும் கடுமையாக ப.சிதம்பரம் விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில், பெட்ரோல், டீசலை சரக்கு மற்றும் சேவை வரி மசோதா வரம்புக்குள் கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருவதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதுதான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததற்கு காரணம்.

பெட்ரோல், டீசல் மண்ணெண்ணெய் ஆகியவற்றை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி கவுன்சில் இதற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று நம்புகிறோம். அதே நேரத்தில் மாநில அரசுகளும் பெட்ரோலிய பொருள்களுக்கு விதிக்கும் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி வரிக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு இருந்தது. ஜி.எஸ்.டி காரணமாக பலரின் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டது மேலும் சந்தையில் மந்தம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஜி.எஸ்.டியில் சில பொருட்களின் மீதான வரியை அரசு திருத்தும் செய்தது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் ஆகியவற்றை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top