பென்னிகுவிக் சிலை லண்டன்-தேனியில் அமைக்க தி.மு.க. ஆதரவு அளிக்கும்: மு.க.ஸ்டாலின் உறுதி

தேனியில் பொங்கல் கொண்டாடிய பென்னிகுவிக் வாரிசுகள் இன்று சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

முல்லைப் பெரியாறு அணையைத் தன் சொந்தச் செலவில் பென்னிகுயிக் கட்டினார். அந்த அணையால்தான், இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகள் பூர்த்தியாகின்றன. அந்த ஊர்களில் சுபகாரியங்களுக்கு அச்சடிக்கப்படும் அழைப்பிதழ்களில், கடவுள் படங்களுக்குப் பதில் பென்னிகுவிக் படம் இடம்பெறும்

தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் செயலாளர் சூசன் பெர்ரோ மற்றும் தேவாலய க்யூரேட்டர் ஷெரோன் பில்லிங் ஆகியோர் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

அவர்களை தமிழர் பாரம்பரிய முறைப்படி மு.க.ஸ்டாலின் அன்புடன் வரவேற்றார்.

மு.க.ஸ்டாலினிடம் கலந்துரையாடிய அவர்கள்,

‘முல்லை பெரியாறு அணையை கட்டி தமிழக மக்களுக்கு பேருதவி செய்த இங்கிலாந்து பொறியாளர் பென்னிகுவிக் மறைந்த பிறகு, அவரது உடல் கிறிஸ்தவ முறைப்படி இங்கிலாந்து செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும், தேவாலய விதிமுறைகளின்படி, 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை, அங்கிருந்து அகற்றப்படுவது வழக்கம் என்றும் தற்போது பென்னிகுவிக் கல்லறை அங்கிருந்து அகற்றப்படும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள், பென்னிகுவிக் கல்லறையை அகற்றாமல் இருக்கவும், லண்டன் மாநகரம் மட்டுமல்லாது தேனியிலும் பென்னிகுவிக் சிலையை அமைக்க முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தனர். ‘தமிழக விவசாயிகளுக்கு தேவையான பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணை கட்டி பெரும் தியாகம் புரிந்த பென்னிகுவிக் சிலையை நிறுவ நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனர்.

அதற்கு பதில் அளித்த மு.க. ஸ்டாலின்,

தி.மு.க. ஆட்சி நடைபெற்றபோது, கடந்த 2000-ம் ஆண்டில், பென்னிகுவிக் சேவைகளைப் போற்றும் வகையில், மதுரையில் அவருக்கு சிலை நிறுவப்பட்ட விவரங்களை நினைவு கூர்ந்தார். லண்டனிலும், தேனியிலும் பென்னிகுவிக் சிலையை அமைக்க தி.மு.க. சார்பிலும், கருணாநிதி சார்பிலும், முழு ஆதரவினை அளிப்பதாகவும், அதற்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர்களிடம் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். மேலும், கருணாநிதி எழுதிய, ‘தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் நிகழ்ந்த சமூக பொருளாதாரப்புரட்சி’ என்ற புத்தகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பை அவர்களிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top