வடகொரியாவுக்கு செல்லும் சரக்கு கப்பலை தடுக்க வேண்டும்:வான்கூவர் கூட்டமைப்பில் அமெரிக்கா

 

ஐநா பொருளாதார தடையை மீறி வடகொரியாவுக்கு செல்லும் சரக்கு கப்பலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வான்கூவர் அமைப்பின் கூட்டத்தில் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

 

கொரிய போரில் தென்கொரியாவுக்கு ஆதரவாக செயல்பட்ட 20 நாடுகள் அடங்கிய வான்கூவர் அமைப்பின் 2 நாள் கூட்டம் கனடாவில் உள்ள வான்கூவர் நகரில் நடைபெற்றது. கனடாவும் அமெரிக்காவும் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன. நேற்று முன்தினம் முடிந்த இந்தக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் தூதரக மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

இதில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் பேசும்போது, “ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து எவுகணை சோதனை நடத்தி வருகிறது. இது உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அத்துடன் கிழக்கு ஆசிய வான்பகுதியில் அதிக அளவில் பயணிக்கும் விமானங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

 

எனவே, வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை தடுத்து நிறுத்த அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் வடகொரியா மீது ஐநா பல சுற்று பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதைச் செயல்படுத்த அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு தர வேண்டும். குறிப்பாக, கடல் பகுதியில் நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

 

தடையை மீறி அந்த நாட்டுக்கு வர்த்தக ரீதியாக பயணிக்கும் கப்பல்களை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள துறைமுகங்களில் ரோந்து கப்பலை பணியில் ஈடுபடுத்த வேண்டும். அணு ஆயுத பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வருமாறு வடகொரியாவுக்கு அழுத்தம் தர வேண்டும்” என்றார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top