கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த தமிழ்ப் படைப்பாளிகள் அறிக்கை

 

ஆண்டாள் பற்றிய சர்சையில் கவிஞர் வைரமுத்து தேவையில்லாமல் பாஜக வின் அதிகாரத்திற்கு அடிபணிந்து  தான் செய்யாத தப்பிற்கு மன்னிப்பு கேட்டு விட்டார்.ஆனால்  .ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகள் ஆர்.கே நகரில் பாஜக நோட்டோவை விட குறைந்த ஓட்டு வாங்கியதை திசை திருப்ப   கவிஞர் வைரமுத்து க்கு   எதிரான போராட்டங்களை முன் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்துத்துவ வெறியின் உச்சமாக கவிஞர் வைரமுத்துவை கொலை செய்யவும் தயங்க மாட்டோம் என நேற்று பாஜக வில் புதிதாக இணைந்த நயினார் நகேந்திரன் கொலை செய்யச்சொல்லி பொதுமக்களை தூண்டி விட்டார்.அரசும் போலிசும் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது

இது  நிறுத்தப்பட வேண்டும் என தமிழ்ப் படைப்பாளிகள் 18 பேர் நேற்று வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

தமிழ்த் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியதுடன் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் மூலம் தமிழ் இலக்கிய உலகுக்கு அளப்பரிய பங்களிப்பை செய்திருப்பவர் கவிஞர் வைரமுத்து. தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தும் முக்கியமான ஆளுமைகள் குறித்து அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். அதன் தொடர்ச்சியாக ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில், சொல்லப்படாத ஒரு சொல்லை சொல்லியதாகச் சொல்லி மக்களை திசைதிருப்பும் செயல்களில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.

 

இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்கள் ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையைப் படிக்காமலேயே பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர். அந்த ஆய்வுக் கட்டுரையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆண்டாளின் பெருமைகளை மேற்கோள் காட்டியிருக்கிறார். அதில் ஓர் ஆராய்ச்சியாளரின் மேற்கோளையும் சுட்டிக் காட்டுகிறார். இதில் எந்தத் தவறும் இல்லை. கடவுள் மறுப்பாளர்களும் கற்க வேண்டிய தமிழ், ஆண்டாளின் தமிழ் என்பதை இந்தக் கட்டுரையில் வைரமுத்து புலப்படுத்தியிருக்கிறார். எந்தவொரு கருத்தையும், கருத்தியல் ரீதியாகச் சந்திக்காமல் பிரச்சினையில் ஈடுபடுவதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

 

தனது கட்டுரையில் எடுத்துக்காட்டிய மேற்கோள், பிறரைப் புண்படுத்தியிருக்கும் பட்சத்தில் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக வைரமுத்து கூறியிருக்கிறார். அதன்பிறகும் தனிப்பட்ட முறையில் அவரை விமர்சிப்பதையும், போராட்டங்களில் ஈடுபடுவதையும், மன்னிப்பு கேட்க கெடு விதிப்பதையும் எழுத்துலகில் இயங்கும் படைப்பாளிகள் இணைந்து கண்டிக்கிறோம்.

 

ஆண்டாள் தமிழச்சி. 3 ஆயிரம் ஆண்டுகளாக பேசவும், எழுதவும்படும் தமிழ் மொழியில் 1,200 ஆண்டுகளுக்கு முன்பே திருப்பாவை பாடியவர். தமிழினம் முழுவதுக்கும் சொந்தமான அவர், தமிழில் பாடிய சர்வதேசக் கவிஞர். அவர் எங்களுக்கே சொந்தம் எனக் கூறி யாரும் பிரச்சினையில் இறங்குவது சரியல்ல.

 

நாகரிகமான, சுதந்திரமான நாட்டில் கவிஞர்கள், எழுத்தாளர்களை பயமுறுத்தி பணிய வைக்க சிலர் முயல்வதை ஜனநாயகத்தின் பெயராலும், சுதந்திரத்தின் பெயராலும் அனுமதிக்க முடியாது. கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் பாதுகாப்புக்கு அரசு முன்னின்று செயல்பட வேண்டும். படைப்புலகில் நீண்டகாலமாக இயங்கி வரும் வைரமுத்து எழுதியதை சரிவர புரிந்து கொள்ளாமலேயே இத்தகைய உணர்ச்சிவயப்பட்ட எதிர்ப்புகளை தூண்டிவிடும் விதத்தில் சிலர் பேசுவதும், எழுவதும் எந்த விதத்திலும் ஆரோக்கியமானதல்ல. எனவே, வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் நிறுத்தப்படுவதுடன், அவர் பாதுகாப்பும் மிக முக்கியமானது என்பதை அரசின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறோம்.

 

தமிழால் ஒருங்கிணைந்திருக்கும் நமக்கிடையே எந்தத் தீய சக்திகளும் சிறு விரிசலை ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்பதை உணர்த்த வேண்டிய தருணம் இது. தமிழ்ச் சமூகம் இதை கண்டிப்பாக உணரும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top