“பத்மாவத்” படத்திற்கு 4 மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையை சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம், ‘பத்மாவதி’. ‘வியாகாம் 18’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படத்தில் வரலாறும், வரலாற்று குறிப்புகளையும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாப்பாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற இந்துத்வா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல மாநிலங்கள் இந்த படத்துக்கு தடையும் விதித்து உள்ளன.

ராஜபுத்ர வம்சத்தினரும் இந்த படத்தை வெளியிடக் கூடாது என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர். உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தன.

இதனால் ரூ.190 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வெளியாவது தள்ளி வைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 1-ந்தேதி வெளியாவதாக இருந்தது நிறுத்தப்பட்டது.

இதையடுத்து படத்தின் பெயர் ‘பத்மாவத்’ என்று மாற்றம் செய்யப்பட்டும், சில காட்சிகள் நீக்கப்பட்டும், கனவு பாடல் காட்சிகளில் திருத்தம் செய்யப்பட்டதும் சென்சார் போர்டு அனுமதி வழங்கியது. வருகிற 25-ந்தேதி பத்மாவத் படம் திரைக்கு வருகிறது.

ஆனால், படத்தில் உள்ள சில காட்சிகள் ராஜ்புத் சமூகத்தினரிடையே எதிர்ப்பினை கிளப்பியுள்ளது. இதனால் ராஜஸ்தான், அரியானா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பத்மாவத் படம் வெளியிட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் மனு செய்தனர். படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த படத்திற்கு பல்வேறு மாநில அரசுகளும் தடை விதித்த நிலையில் இவ்விவகாரத்தினை அவசரமுடன் விசாரிக்க வேண்டிய வழக்கு என கருதி அதனை விசாரணை மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர் மற்றும் டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று விசாரணை மேற்கொண்டது.

அதில், பத்மாவத் திரைப்படத்துக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அரியானா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதிகள் இன்று உத்தரவு பிறப்பித்தனர். இதனால் இத்திரைப்படம் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வருகிற 25ந்தேதி வெளியிடப்படும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top