போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது: விஜயகாந்த் குற்றச்சாட்டு

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்கிட வேண்டும், ஓய்வூதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும், விதிகளுக்குப் புறம்பாக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து செலவு செய்த, ஊழியர்களின் ஊதியப்பிடித்தம் 7,000 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 4-ந் தேதி போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் கடந்த 8 நாட்களாக ஈடுபட்டுவந்தனர்.

அரசு தரப்பிலும், போக்குவரத்து நிர்வாகத்தரப்பிலும் தொழிலாளர்களுக்கு உடன்பாடு எட்டப்படாததால், நீதிமன்ற முடிவை ஏற்று கொண்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து  12ஆம் தேதி வேளைக்கு திரும்பினார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தங்கள் ஊதிய உயர்வு மற்றும் இதர பிரச்சனைகளுக்காக நியாயமான போராட்டத்தை நடத்தினார்கள். அரசு தரப்பிலும், போக்குவரத்து நிர்வாகத்தரப்பிலும் தொழிலாளர்களுக்கு உடன்பாடு எட்டப்படாததால், நீதிமன்ற முடிவை ஏற்றுக்கொண்டார்கள்.

இதை ஏற்றுக்கொள்ளாத அரசு தற்பொழுது நிர்வாகத்தின் மூலம், தொழிலாளர்களுக்கு பல இன்னல்களை கொடுத்து வருகிறது. ஓட்டுனர், நடத்துனர்கள் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு பணியாற்றும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். ஆளும் கட்சியை சேர்ந்த சில தொழிலாளர்களுக்கு பொங்கல் விடுமுறை கொடுத்துவிட்டு, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை கூடுதல் பணி செய்யவேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்.

மன உளைச்சலோடு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உயிர்சேதம், விபத்து ஏற்பட்டால், நிர்வாகமும், அரசும் முழுப்பொறுப்பேற்க வேண்டும். போக்குவரத்து கழகத்தில் நிர்வாகம் செய்யும் தவறுகளை மூடிமறைப்பதற்கு தொழிலாளர்கள் மீது வீண் பழி போடுவதும், கூடுதல் பணி செய்ய கட்டாயப்படுத்துவதும், விடுமுறை கொடுக்க மறுப்பதும் போன்ற செயல்களில் ஈடுபடுவதை தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

போக்குவரத்து கழகத்தை எப்படி சீர்செய்வது என்று அதிகாரிகள் ஆலோசித்து தொழிலாளர்களையும், பொதுமக்களையும் பாதிக்காத வண்ணம் போக்குவரத்து துறை வளர்ச்சி அடைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top