சாதி ஆணவகொலைகளை செய்யும் காப் பஞ்சாயத்தை தடைசெய்யவிட்டால் மத்திய அரசு மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட்

வட இந்தியாவின் பல்வேறு கிராமங்களில் காப் பஞ்சாயத்து எனப்படும் ஊர் பஞ்சாயத்து செயல்படுகிறது. இங்கு சாதாரண அடிதடி பிரச்சனையில் தொடங்கி குடும்ப பிரச்சினை வரை விசாரித்து மக்கள் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. குறிப்பாக இரு வேறு சாதிகளைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குகின்றனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இரு வேறு சாதிகளைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கு தீர்ப்பு என்னும் பெயரில் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குகின்றனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இத்தனை ஆண்டுகளாக வடஇந்திய கிராமங்களில் சாதியை காத்து அதை மேலும் வலுவாக்கும் சாதிவெறி போக்கினை கொண்ட காப் பஞ்சாயத்து எனப்படும் ஊர் பஞ்சாயத்து இன்றுஅளவும் செயல்பட்டு வருவதை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அரசு தடைசெய்யாமலும் அதை கண்டித்தும் எந்த விதமான முயற்சிகளிலும் ஈடுபடாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், காப் கட்டப்பஞ்சாயத்து தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இன்று முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

காப் பஞ்சாயத்தாரை கடுமையாக கண்டித்துள்ள நீதிபதிகள், ஒரு ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்வது அவர்களின் விருப்பம் என்றும், சாதிகளை மறந்து காதல் திருமணம் செய்வோரை யாரும் தடுக்கக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.

திருமண வயதை எட்டிய ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதை ஊர் பஞ்சாயத்தோ, தனிநபரோ அல்லது இந்த சமூகமோ கேள்வி எழுப்ப முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

“18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப திருமணம் செய்தால், அவர்களை ஊர் பஞ்சாயத்தில் தண்டிப்பது சட்டத்திற்கு எதிரானது. காப் பஞ்சாயத்துக்கு தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் எடுக்கும்” என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் இளம் தம்பதிகள் ஆணவ கொலை செய்யப்படுவதை தடுக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் ராஜூ ராமச்சந்திரன் அளித்த பரிந்துரைகள் மீது மத்திய அரசின் நிலைப்பாட்டையும் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

சக்தி வாஹினி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கடந்த 2010-ல் இந்த வழக்கைத் தொடர்ந்தது. சாதி மாறி திருமணம் செய்பவர்களை கட்டப்பஞ்சாயத்து மூலம் தாக்குவதும், பிரித்துவைப்பதும் குறித்து முறையிட்டிருந்தது. இதனைத் தடுக்க உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைக் கோரியிருந்தது. ஹரியாணா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் இத்தகைய கட்டப் பஞ்சாயத்து சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதைக் குறிப்பிட்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மத்திய அரசு, கிராம பஞ்சாயத்துகளின் வன்முறைகளில் இருந்து பெண்களைக் காக்க, கண்காணிக்க உச்ச நீதிமன்றமே ஏதாவது வழிமுறையை சொல்ல வேண்டும் எனக் கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சாதி மாறி திருமணம் செய்த தம்பதிகளைத் தாக்குவது சட்டவிரோதமானது எனக் கூறியுள்ள உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top