தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

இரண்டாயிரம் வருடங்கள் வரலாறு கொண்ட சிறப்புமிக்க தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் கோலாகலமாக நடந்து வருகிறது.

பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு உற்சாகமாக நடைபெற்றது.

இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. முன்னதாக வாடிவாசலில் முதலமைச்சர்ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசித்தார்.

“ஜல்லிக்கட்டை கொண்டாடிடவும், நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பேணி காப்போம் என்றும், விளையாட்டில் சீறி வரும் காளைகளுக்கும் எவ்வித ஊறும் செய்ய மாட்டோம் என்றும் இவ்விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் சிறிதும் தீங்கு நேராமல் அரசு விதிமுறையை பின்பற்றி விளையாடுவோம் என்றும் உறுதி மொழிகிறோம்” என முதல்வர் வாசிக்க உடன் இருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

அதன்பின்னர் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் வாடிவாசலில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகள் பங்கேற்கின்றன. 1,241 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. காளைகளை அடக்கும் வீரர்களுக்கு தங்க நாணயம், மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள், பீரோ, சில்வர் பாத்திரங்கள், பட்டு வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன.

போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சூழலைப் பொருத்து தேவைப்பட்டால் கூடுதல் நேரம் போட்டியை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில், போட்டியை கூடுதல் நேரம் நடத்த அனுமதிக்கும்படி முதலமைச்சருக்கு மாடுபிடி வீரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற முதலமைச்சர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படும் என அறிவித்தார்.

ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி அங்கு பாதுகாப்பு பணிக்காக பெரும் அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top