தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் சித்தராமையாவின் பேச்சுக்கு திருமாவளவன் கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் தாய் பெரியம்மாள் மற்றும் குடும்பத்தினர், கிராம பொதுமக்கள், கட்சி தொண்டர்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடினார்.

கிராம மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை கூறிய பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி, தமிழக மக்களுக்கு நல்லதொரு ஒளி மயமான காலம் உருவாக வேண்டும். சாதி, மதவாதத்திலிருந்தும், ஊழல் முறைகேடுகளிலிருந்தும் தமிழகம் மீளவேண்டும், இந்த பொங்கல் திருநாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். விவசாய குடும்பங்கள், கால்நடைகள் வளர்ப்பவர்கள் பாரம்பரியமாக இவ்விழாவை கொண்டாடி வருகின்றனர்.

விவசாயத்தை பாதுகாக்க இந்த நாளில் நாம் அனைவரும் சூளுரை ஏற்போம். தமிழ் சமூகம் கொண்டாடுகின்ற இந்த நாளில் கர்நாடக முதல்வர் எந்த சூழ்நிலையிலும் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என கூறியது அடிவயிற்றில் இடி விழுந்தது போல் உள்ளது.

தை முதல் நாளுக்கு அவர் வாழ்த்து சொல்வதற்க்கு மாறாக வேதனையூட்டும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சொல்லியிருப்பது மிகுந்த வேதனையளிக்கின்றது.

இதற்கு தமிழக முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார். தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். கவிஞர் வைரமுத்து கூறிய சர்ச்சை கருத்து தொடர்பாக அவரே மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் அதை ஏற்காமல் எச்.ராஜா அநாகரீகமாக வெளியிட்ட கருத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இதனை தமிழக அரசு தொடர்ந்து வேடிக்கை பார்ப்பது சமூக நல்லிணத்திற்க்கு உகந்தது அல்ல. அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிபதிகள் பிரச்சினையில் தமிழக நீதிபதி கர்ணனை விசாரிக்காமலேயே சிறையில் வைத்தனர். தற்போது இதே போலதான் இந்த நீதிபதிகள் குற்றச்சாட்டு வைக்கிறனர்.

இந்திய நீதிமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் உச்சநீதிமன்ற நான்கு நீதிபதிகள் சேர்ந்து ஊடகம் வாயிலாக தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். காலம் காலமாக இத்தகைய முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள், அரசியல் குறுக்கீடுகள் நீதி நிர்வாகத்தில் இருந்தாலும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்கிற நிலைதான் தொடர்கிறது. எல்லாவற்றிற்கும் நீதியின் கடைசி அறன் உச்சநீதிமன்றம்தான், ஆனால் அங்கேயே ஊழல், முறைகேடுகள், அரசியல் தலையீடுகள் தலை விரித்தாடுகின்றன. இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும், நீதிமன்ற நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

தமிழகத்தில் மதம், ஜாதி வெறியாட்டத்தை தூண்டும் வகையில் சில சக்திகள் முயற்சித்து வருகின்றது. இது மதசார்பற்ற மண் என்பதை தமிழக அரசு உறுதிபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top