தலைமை நீதிபதி பாரபட்சமாக செயல்படுகிறார்; 4 மூத்த நீதிபதிகள் பரபரப்பு குற்றச்சாட்டு

நாட்டின் முக்கியமான நான்கு தூண்களில் ஒன்றான நீதி துரையின் மீதும், தலைமை நீதிபதிக்கு எதிராகவும் நான்கு நீதிபதிகள் நேற்று பல்வேறு புகார்களை கூறி போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

இந்தியாவில் நீதிபரிபாலனத்தின் தலைமை பீடமாக டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு விளங்குகிறது. சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இருந்து வருகிறார்.

சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்றில் முதன்முறையாக தலைமை நீதிபதிக்கு எதிராக, அவருக்கு அடுத்த நிலையில் உள்ள 4 மூத்த நீதிபதிகள் நேற்று திடீரென்று பல்வேறு புகார்களை கூறி போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றில் விசாரணைக்காக வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டி இருப்பதும், நீதிபதிகள் இடையே முதன் முதலாக மோதல் போக்கு ஏற்பட்டு இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து ஜே.செல்லமேஸ்வரின் இல்லத்தில் ஏராளமான நிருபர்களும், டி.வி.கேமராமேன்களும் திரண்டனர். அங்கு மூத்த நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

நீதிபதிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது . இப்படியே போனால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது.

சில மாதங்களுக்கு முன்பு முக்கிய விவகாரம் ஒன்றில் 4 நீதிபதிகள் கையெழுத்திட்டு கடிதம் அளித்தோம். உச்சநீதிமன்றத்தை பாதுகாக்க தலைமை நீதிபதிக்கு கொண்டு சென்ற சில விவகாரங்கள், நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது. உச்ச நீதிமன்ற நிர்வாகத்தில் கடந்த சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகள் வருத்தம் அளிக்கின்றன. நீதித்துறையில் சில விதிகள் முறைப்படி பின்பற்றப்படுவதில்லை. இதே நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது. இன்று காலை தலைமை நீதிபதியை சந்தித்து எங்கள் குறைகளை முறையிட்டோம்

நாங்கள் கொடுத்த கடிதத்தின் பிரதிகளை ஊடகங்களுக்கு கொடுக்கிறோம். அந்த கடிதத்தில் அனைத்து விவரங்களும் உள்ளன. உச்சநீதிமன்றத்தை பாதுகாப்பது குறித்து நாட்டு மக்களே முடிவு செய்ய வேண்டும் என நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார்.

இந்த நாட்டின் தலைமை கோர்ட்டின் நிர்வாகம் திருப்தி தரும் வகையில் அமையவில்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்றில் எப்போதுமே நிகழாத ஒரு செயல் இது என்றும், கோர்ட்டு நிர்வாகத்தின் வழிமுறைகளை மாற்றிக் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை தலைமை நீதிபதி (தீபக் மிஸ்ரா) ஏற்றுக்கொள்ளாததால் தாங்கள் நால்வரும் வேறு வழியின்றி இந்த நடவடிக்கையை (நிருபர்கள் சந்திப்பு) எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அந்த கடிதத்தில், நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்வது தலைமை நீதிபதியின் தனிப்பட்ட உரிமை என்றபோதிலும், இதில் பாரபட்சம் காட்டப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். வழக்குகளை ஒதுக்கும் உரிமை இருப்பதால் அவர் உயர்ந்தவர் அல்ல என்றும், மற்ற நீதிபதிகள் அவருக்கு குறைவானவர்கள் அல்ல என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top