தறி பட்டறையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குழந்தை : தமிழக அரசின் அலட்சியப்போக்கு; மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

2014-ம் ஆண்டு கோவையில் மின்விசை தறி பட்டறை ஒன்றில் மின்சாரம் தாக்கி 6 வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்டது.

இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவையில் மின்விசை தறி பட்டறை ஒன்றில் 6 வயது பெண் குழந்தை மின்சார விபத்தில் கருகி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் கடந்த 2014 செப்டம்பர் 1-ந் தேதி பதிவு செய்யப்பட்ட புகார் ஒன்றின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில், மேற்படி தறி பட்டறை சட்ட விரோதமாக மின்சார இணைப்பு பெற்று இயங்குவது குறித்து மாநில மின்துறை அதிகாரிகளால் சரியான முறையில் விளக்கம் தரமுடியவில்லை. எனினும் இந்த தறி பட்டறையில் சட்ட விரோதமாக மின் இணைப்பை பயன்படுத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பட்டறையில் உயிரிழந்த பெண் குழந்தையின் பெற்றோருக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் அடிப் படையில் ஊதியம் வழங்கப் படுகிறது என்றோ அல்லது அவர்கள் அங்கு கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்படவில்லை என்பதை நிரூபிக்கும் வகையிலோ அந்த பட்டறையில் எந்த ஆவணங்களோ, பதிவேடுகளோ இல்லை என்பது கண்டறியப்பட்டு உள்ளது.

விபத்தில் உயிரிழந்த பெண் குழந்தை அங்கு கொத்தடிமைகளாக பணிபுரிந்த ஒரு தம்பதியின் குழந்தை என்றும், அந்த குழந்தையின் பெற்றோர் தங்கள் மூத்த மகளின் திருமணத்துக்காக சொந்த கிராமத்துக்கு சென்றபோது இந்த குழந்தை பிணையாக பிடித்து வைக்கப்பட்டதும் தெரியவந்தது.

அப்போது அந்த குழந்தை தறி பட்டறையில் சட்ட விரோதமாக பெறப்பட்ட மின் இணைப்பு உள்ள வயர் ஒன்றை தொட்டதால் விபத்து ஏற்பட்டு உள்ளது. இது தமிழ்நாடு மின்துறை வாரியத்தின் அலட்சியப்போக்கினால் ஏற்பட்ட சம்பவம் என்றே எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்த துறையின் அலட்சியத்தினால் விளைந்த இந்த மனித உரிமை மீறலுக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்.

எனவே, இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் குழந்தையின் பெற்றோருக்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்க ஏன் பரிந்துரைக்கக் கூடாது என்று தமிழக அரசின் தலைமை செயலாளரிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top