8 நாட்களாக தொடர்ந்த பஸ் ஸ்டிரைக் வாபஸ்: இன்று காலை முதல் பேருந்துகள் வழக்கம் போல இயங்கின


குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்கிட வேண்டும், ஓய்வூதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும், விதிகளுக்குப் புறம்பாக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து செலவு செய்த, ஊழியர்களின் ஊதியப்பிடித்தம் 7,000 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 4-ந் தேதி போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் கடந்த 8 நாட்களாக ஈடுபட்டுவந்தனர்.

இதுதொடர்பான வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அரசுத்தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு மட்டும்தான் வழக்கு தொடரப்பட்டது என நீதிபதிகள் கூறியதை தொடர்ந்து, போராட்ட காலத்திற்கு ஊதியம், வழக்குப்பதிவு உள்ளிட்ட விவகாரங்களில் பரிசீலனைக்கு பின்னர் முடிவெடுக்கப்படும் என அரசு வழக்கறிஞர் கூறினார்.

இழுவையில் இருக்கும் 0.13 காரணி ஊதிய உயர்வு குறித்து இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தரை நியமிக்க தயார் என நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நடுவராக நியமித்து ஐகோர்ட் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

2.57 காரணி ஊதியம் தொடர்பான விஷயங்களை மத்தியஸ்தர் முடிவெடுப்பார். எந்த தேதியிலிருந்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை அவரே முடிவெடுப்பார்.

இதுதொடர்பாக விசாரணை அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தங்களது நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர். பின், வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பின்னர் நீண்ட ஆலோசனை நடத்திய தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக நேற்று அறிவித்தனர்.

இன்று காலை முதல் அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் இயல்பு நிலை திரும்பி வருகிறது என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு திருப்பினார்.

உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இன்று காலை முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்களின் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top