சில்லரை வணிகத்தில் 100% சதவீதம் அன்னிய நேரடி முதலீடு – மத்திய அரசு ஒப்புதல் : வைகோ கண்டனம்

அன்னிய முதலீட்டு கொள்கையை நேற்று மேலும் தளர்த்தி சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஒற்றை வணிக முத்திரை சில்லரை வணிகப் பிரிவில் நூறு விழுக்காடு அயல்நாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டுக்கு இடம் அளிக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,

“பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், ஜனவரி 10 ஆம் தேதி கூடிய மத்திய அமைச்சரவை, ஒற்றை முத்திரை சில்லரை வணிகப் பிரிவில் 100 விழுக்காடு அயல்நாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டுக்கு உரிமம் வழங்குவது என முடிவு செய்து இருக்கின்றது.

ஜனவரி 22 ஆம் தேதி, சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கின்றார். பன்னாட்டு நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் தங்கு தடையின்றி நுழைய இடம் அளித்து விட்டோம் என்று அந்த மாநாட்டில் பிரகடனம் செய்வதற்காகவே, இப்படி ஒரு முடிவு எடுத்து இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

கடந்த 2014 ஆம் ஆண்டில், சில்லரை வணிகத்தில் 100 விழுக்காடு அயல்நாட்டு நேரடி முதலீடு செய்ய இடம் அளிக்கப்பட்டு இருந்தாலும், 49 விழுக்காட்டுக்கு மேலே முதலீடு செய்வதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை. ஆனால், தற்போது பன்னாட்டு நிறுவனங்கள் மத்திய அரசிடம் ஒப்புதல் பெறாமலேயே 100 விழுக்காடு முதலீடு செய்ய முடியும்.

அயல்நாட்டு நிறுவனங்கள் பொருட்கள் தயாரிப்பின்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் மூலப் பொருட்களை 30 விழுக்காடு கொள்முதல் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக இருந்ததையும் மத்திய அரசு தற்போது நீக்கி விட்டது. எனவே, அவர்கள் இனி உள்நாட்டுப் பொருட்களைக் கொள்முதல் செய்யத் தேவை இல்லை. வெளிநாட்டுப் பொருட்கள் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் விற்பனை செய்வதற்குக் கதவுகள் திறக்கப்பட்டு இருக்கின்றன.

ஏற்கனவே சில்லரை வணிகத்தில் வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியப் பெரு நிறுவனங்களும் சிறு வணிகர்களின் வணிகத்தைத் தட்டிப் பறித்து விட்டன. அதனால், சுமார் ஏழு கோடி சிறு வணிகர்களும், அவர்களைச் சார்ந்த 21 கோடி பேரின் வாழ்வாதாரமும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றது.

இந்நிலையில், சில்லரை வர்த்தகத்தில் ஒற்றை வணிக முத்திரைப் பொருட்கள் விற்பனையில் நூறு விழுக்காடு அயல்நாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டுக்கு இடம் அளிப்பதும், மத்திய அரசின் ஒப்புதல் இன்றி, இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் கடைகள் திறக்கலாம் என்பதும், கோடிக்கணக்கான வணிகர்களைப் பாதிக்கும்.

எனவே மத்திய அரசு ஒற்றை வணிக முத்திரை சில்லரை வணிகப் பிரிவில் நூறு விழுக்காடு அயல்நாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டுக்கு இடம் அளிக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்” எனக் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top