7வது நாளாக தொடரும் பஸ் ஸ்டிரைக்: வேலை நிறுத்தத்திற்கு காரணம் அரசுதான், தொழிலாளர்கள் இல்லை – சி.ஐ.டி.யு

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்கிட வேண்டும், ஓய்வூதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும், விதிகளுக்குப் புறம்பாக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து செலவு செய்த, ஊழியர்களின் ஊதியப்பிடித்தம் 7,000 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 4-ந் தேதி போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

தொழிலாளர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. ரூ.750 கோடி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் சட்டசபையில் அறிவித்த நிலையில், 7000 கோடி ரூபாய் நிலுவைத்தொகை உள்ள நிலையில், 750 கோடி ரூபாய் ஏற்க முடியாது என்று கூறிய தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் தொடரும் என்று அறிவித்தனர்.

இந்நிலையில், அறிவிப்பு ஏதும் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக தொழிற்சங்கங்கள் மீது புகார் கூறப்பட்ட வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நோட்டீஸ் அளித்த பின்னரே தற்போது ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறோம் என்று சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் சார்பில் வாதாடப்பட்டது.

அரசின் ஊதிய ஒப்பந்தத்தில் 32 தொழிற்சங்கங்கள் மட்டுமே கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. வேலை நிறுத்தத்திற்கு காரணம் அரசுதான், தொழிலாளர்கள் இல்லை என்று கூறிய சி.ஐ.டி.யு வழக்கறிஞர், நீடிக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண விரும்புவதாகவே தெரிவித்தார். ஓராண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்துள்ளதாக தொ.மு.ச வழக்கறிஞர் வாதிட்டார்.

ஊதிய உயர்வு தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தை அரசு திரும்பப் பெற்றால் பணிக்கு திரும்ப தயாராக இருப்பதாக சி.ஐ.டி.யு தெரிவித்தது. அனுபவம் இல்லாத தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களைக் கொண்டு அரசு, பேருந்துகளை இயக்கிவருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பல இடங்களில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. அரசின் இந்த செயல் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதால் பேருந்துகளில் பயணம் செய்ய அஞ்சுகிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top