தொழிலில் முடங்கியவர்கள், அரசியல் தெரியாதவர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள்:மு.க. ஸ்டாலின்

 

அரசியல் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் தொழில் செய்ய முடியாமல் முடங்கியதால் அரசியலுக்கு வருகிறார்கள் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

திமுக இளைஞரணிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட ஸ்டாலின் பேசியதாவது:

 

”இந்தக் கூட்டத்தில் நானும் பங்கேற்று, உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்று, அதே நேரத்தில் நீங்கள் எல்லாம் ஆற்றக்கூடிய பணிகள் குறித்து சில கருத்துகளை எடுத்துச் சொல்லி இந்தக் கூட்டத்தை நான் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

 

இந்தக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. பேச்சைக்குறைத்து செயலில் நமது திறமையை காட்ட வேண்டும் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. இந்தக் கூட்டத்தைப் பொருத்தவரை, பேச்சைக் குறைத்தல்ல, பேச்சையே தவிர்த்து, இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கின்ற தீர்மானங்களை செயலில் காட்டுவோம் என்ற உங்களுடைய உணர்வுகளை என்னால் அறிந்து கொள்ள முடிகிறது.

 

ஒன்றை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பல முக்கியமான காலகட்டங்களில், இளைஞரணியினர் காரியத்தில் இறங்கி அதனை எல்லாம் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளின் மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் முன் ஒன்றுகூடி, மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.

 

அதுதான் திமுக தொடக்க காலங்களில் இருந்து அப்படிப்பட்ட பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் 1965-ல் நடைபெற்ற மொழிப் போராட்டம். 1967-ல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைவதற்கே காரணமாக அமைந்தது அந்த மொழிப் போராட்டம்.

 

ஆனால், அண்மைக்காலங்களில் நெடுவாசலில் தாய்மார்கள், பொதுமக்கள், இளைஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒருமித்த கருத்தோடு, தொடர் போராட்டம் நடத்துவது உங்களுக்கெல்லாம் நன்கு தெரியும். அதேபோல, கதிராமங்கலம் போராட்டம், மெரினா புரட்சி என்று சொல்லக்கூடிய அளவுக்கு நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்துள்ளது.

 

இளைஞர்கள் மாணவர்கள் மட்டுமல்ல அவர்களை எல்லாம் ஈன்றெடுத்த பெற்றோரும், அவர்களின் ஆசிரியர்களும் இணைந்து, ஒட்டுமொத்தமாக அனைவரும் இணைந்து நடத்திய போராட்டமாக அமைந்தன. அப்படிப்பட்ட ஒரு எழுச்சி, உணர்ச்சி, ஆரவாரம், ஆர்ப்பாட்டம், திமுக இளைஞரணியில் உள்ள உங்கள் அனைவருக்கும் வர வேண்டும்.

 

காரணம், இன்றைக்கு யார் யாரோ அரசியலுக்கு வருகிறார்கள். அரசியல் என்றால் என்னவென்றே தெரியாதவர்களும் அரசியலுக்கு வருகிறார்கள். தாங்கள் செய்து கொண்டிருக்கும் தொழிலில் தங்களால் ஈடுபட முடியாது, வெற்றி பெற முடியாது, இனி வளர்ச்சி பெற முடியாது என்று எண்ணி வருகிறார்கள். ஆனால், அரசியலுக்கு வருபவர்கள் என்ன சொல்லி வருகிறார்கள்? அவர்களுக்கு யார் தூண்டுகோலாக இருக்கிறார்கள்? அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

 

மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக, எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களை எல்லாம் கைப்பற்ற வேண்டும் என்று திட்டமிட்டு அதற்காக மதத்தை, ஜாதிகளை, கடவுளை எல்லாம் பயன்படுத்தி முழு மூச்சாக அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், அவையெல்லாம் தமிழ்நாட்டில் எடுபடுமா? முடியுமா? அவர்கள் நினைப்பது இங்கு நடக்குமா? என்று கேட்டால் உறுதியாக நான் சொல்கிறேன், அவர்களால் இங்கு கால் ஊன்றக்கூட முடியாது.

 

காரணம் இது திராவிட மண். இது, பெரியார், அண்ணா ஆகியோரை தொடர்ந்து தலைவர் கருணாநிதி ஆகியோரால் பண்படுத்தப்பட்ட மண். இந்த மண்ணில் அவர்கள் எவ்வுளவுதான் குட்டிக்கரணம் போட்டாலும், படுத்து உருண்டாலும், அது நிச்சயம் நடக்கப் போவதில்லை.

 

ஆனால், இப்படிச் சொல்லிவிட்டு அமைதியாக இருந்தால் நாம் ஏமாந்து போய் விடுவோம் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அண்ணா இந்த இயக்கத்தை உருவாக்கவில்லை. ஆட்சிக்கு வரும்போது மக்களுக்குப் பணியாற்ற, தொண்டாற்ற வேண்டும், திராவிட இயக்கக் கொள்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்ற நிலையில் தான், ஆட்சிக்கு வர வேண்டும் என்று அவர் எண்ணினார்.ஆட்சிக்கு வந்ததும் அவற்றையெல்லாம் நிறைவேற்றிக் காட்டினார். அதன் பிறகு தலைவர் கருணாநிதியும் நிறைவேற்றினார். ஆட்சியில் இல்லாத நேரங்களிலும் நம்முடைய இனத்துக்காக, மொழிக்காக, கலாச்சாரத்துக்காக தொடர்ந்து போராடிக்கொண்டு, குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

 

அந்த வழியில் நின்று தான் திமுக இன்றைக்கும் பீடுநடைப் போட்டுக் கொண்டிருக்கிறது. 1980-81 ல் கருணாநிதியால் திமுக இளைஞரணி தொடங்கப்பட்டு, மிகப்பெரும் உணர்ச்சியை, வளர்ச்சியை நாம் பெற்றோம்.”

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top