திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமாக்குவதை நிறுத்த சுப்ரீம் கோர்ட்டில் மனு

திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சியாம் நாராயணன் சவுக்சி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் என்று கடந்த 2016–ம் ஆண்டு நவம்பர் 30–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை மத்திய அரசும் ஆதரித்து வந்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று ஒரு மனுதாக்கல் செய்தது. அதில், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்கிற உத்தரவை மாற்ற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. தேசிய கீதத்தை இசைப்பது தொடர்பான வழிமுறைகளை அமைச்சரவை குழு உருவாக்கும் வரை இதனை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

எந்தெந்த சந்தர்ப்பங்களில், நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படவோ, பாடப்படவோ வேண்டும் என்பது பற்றியும், அப்போது கடைபிடிக்க வேண்டிய கண்ணியம் குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளை இந்த குழு வகுக்கும். குழு அமைக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் அக்குழு தனது சிபாரிசுகளை சமர்ப்பிக்கும்.

அவற்றை பரிசீலித்து, உரிய அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிடும். அதாவது தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவுக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஆதலால் திரையரங்குகளில் தேசியகிதம் இசைப்பது நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுஉள்ளது. இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது.

தேசிய கீதம் தொடர்பான பொதுநல வழக்கில் இன்று விசாரணை நடைபெற உள்ள நிலையில், மத்திய அரசு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top