ஆட்சி மாற்றத்துக்காக எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து செயல்படுவது தவறில்லை: தினகரன் கருத்து

முதல்வரிடம் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் சொல்லாததுடன், இந்த அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது ஜனநாயகப் படுகொலை என்று எம்எல்ஏ தினகரன் தெரிவித்தார்.

இந்தாண்டின் தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

இக்கூட்டத்தில் முதன்முறையாக ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ தினகரன் கலந்துகொண்டார். ஆளுநர் உரை முடிந்ததும், பேரவையில் இருந்து வெளியே வந்த தினகரன் நிருபர்களிடம் பேசியதாவது:

சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரையாற்றும்போது தமிழ்நாடு 2023 தொலைநோக்கு திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்று தெரிவித்தார். இங்கு அரசு இயந்திரம் செயல்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் 2023 தொலைநோக்கு திட்டத்தை எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை?

டெல்டா பகுதியை மிகவும் பாதிக்கிற மீத்தேன் திட்டத்தை தடை செய்வது பற்றியும், அப்பகுதி விவசாயிகளின் பாதுகாப்பு குறித்தும் எந்த தகவலும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான முயற்சி பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. 13 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவோம் என்று சொல்லியுள்ளனர். ஆனால், 100 மெகாவாட் மின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தியதாகக்கூட தெரியவில்லை.

பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டமே இன்னும் ஆவண மட்டத்திலே இருக்கும்போது அதற்கான உதவித் தொகை உச்சவரம்பை உயர்த்தியிருப்பது வெறும் கண்துடைப்பு. அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து சொல்லவில்லை. அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான சலுகைகள், ஓய்வூதிய பலன்கள் குறித்து சொல்லவில்லை.

சட்டப்பேரவையில் 111 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் முதல்வரை அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்க சொல்ல வேண்டிய ஆளுநர், இந்த அரசை அங்கீகரிக்கும் வகையில் உரையாற்றியது தவறு. முதல்வரிடம் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் சொல்லாததுடன், இந்த அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது ஜனநாயகப் படுகொலையாகும்.

மொத்தத்தில் ஆளுநர் உரை சடங்கு, சம்பிரதாயமாகவே நடந்துள்ளது. இந்த ஆட்சி மாற்றத்துக்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன். எங்கள் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்கில் பொங்கலுக்குப் பிறகு நல்ல தீர்ப்பு வரும். இந்த ஆட்சி மாற்றத்துக்காக நாங்கள் ஓட்டுப் போடுவோம். அதுபோல எதிர்க்கட்சிகளும் ஓட்டுப் போட்டால் நல்லதுதான். மக்கள் எதிர்பார்ப்பதை செய்வதற்கு, ஒரு நல்ல விஷயத்துக்காக எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து செயல்படுவது தப்பில்லை.

இவ்வாறு தினகரன் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top