இந்தியா – தென்ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் 5-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 286 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்தியா 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹர்திக் பாண்டியா 93 ரன்கள் அடித்து இந்தியாவின் ஸ்கோர் கவுரவமான நிலையை எட்ட காரணமாக இருந்தார்.

இதையடுத்து 77 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களான மார்க்ரம் 34, டீன் எல்கர் 25 ரன்களில் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தனர்.

2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்திருந்தது. ரபாடா 2, ஹசிம் ஆம்லா 4 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தனர். மேலும் தென் ஆப்பிரிக்கா 142 ரன்கள் என்ற முன்னிலை பெற்றிருந்தது.

நேற்றைய முன்தினம் 3-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் தடைபட்டது. நேற்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரபாடா, அம்லா பேட்டிங்கை தொடங்கினார்கள். இந்திய வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்ஆப்பிரிக்கா அணி திணறியது. அம்லா 4 ரன்களிலேயே மொகமது சமி பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். ரபாடா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் டு பிளிசிஸ் ரன்ஏதும் எடுக்காமல் பும்ரா பந்தில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் டி காக் (8), பிலாண்டர் (0), மகாராஜ் (15), மோர்கல் (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா திணறியது. கடைசி விக்கெட்டாக டி வில்லியர்ஸ் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 130 ரன்னில் சுருண்டது.

2-வது இன்னிங்சில் பும்ரா, மொகமது ஷமி தலா 3 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

முதல் இன்னிங்சில் 77 ரன்கள் முன்னிலைப் பெற்றதுடன் தென்ஆப்பிரிக்கா 207 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தவான், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

இந்தியா 30 ரன்கள் சேர்த்துஇருந்த பொது தவான் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய முரளி விஜய் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாரா 4 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்தியா 39 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.

4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓரளவிற்கு தாக்குப்பிடித்து இந்தியாவின் ஸ்கோரை 71 ரங்களுக்கு எடுத்து சென்றனர். 71 ரன்களை எட்டிய இந்தியா அப்போது காலத்தில் 28 ரன்கள் குவித்து இருந்த விராட் கோலி பிலாண்டர் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் இந்தியாவின் விக்கெட் சீட்டுக்கட்டுபோல் சரிந்தது.

ரோகித் சர்மா 10 ரன்னிலும், சகா 8 ரன்னிலும், பாண்டியா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார். 71 ரன்னுக்கு 4 என்ற நிலையில், 82-க்கு 7ஆக மாறியது.

8-வது விக்கெட்டுக்கு அஸ்வின் உடன் புவனேஸ்வர் குமார் ஜோடி சேர்ந்தார். இந்தியாவின் ஸ்கோர் 100-ஐ தாண்டியது. அணியின் ஸ்கோர் 131 ரன்னாக இருக்கும்போது பிலாண்டர் வீசிய 43-வது ஓவரின் முதல் பந்தில் அஸ்வின் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 2-வது பந்தில் பவுண்டரி அடித்த ஷமி, 3-வது பந்தில் ஆட்டமிழந்தார். பும்ரா 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 135 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

இதனால் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பிலாண்டர் அபாரமாக பந்து வீசி 15.4 ஓவரில் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கெட்டுக்கள் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டும் வீழ்த்திய பிலாண்டர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் செஞ்சூரியனில் வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top