இந்தியா-தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட: 3-வது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் 5-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 286 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்தியா 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹர்திக் பாண்டியா 93 ரன்கள் அடித்து இந்தியாவின் ஸ்கோர் கவுரவமான நிலையை எட்ட காரணமாக இருந்தார்.

இதையடுத்து 77 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களான மார்க்ரம் 34, டீன் எல்கர் 25 ரன்களில் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தனர்.

2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்திருந்தது. ரபாடா 2, ஹசிம் ஆம்லா 4 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தனர். மேலும் தென் ஆப்பிரிக்கா 142 ரன்கள் என்ற முன்னிலை பெற்றிருந்தது.

நேற்றிரவு கேப் டவுனில் மழை பெய்தது. மழை நீர் வெளியேற்ற பட்டதும் ஆட்டம் தொடங்க இருந்தது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் ஆடுகளத்தைப் பார்வையிட்ட நடுவர்கள் 3-ம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து 4, 5-ம் நாள் ஆட்டங்களின்போது ஒவ்வொரு நாளும் 90 ஓவர்களுக்கு பதிலாக 98 ஓவர்கள் வீசப்படும் என்றும் நடுவர்கள் அறிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top