தமிழகம் முழுவதும் 5-வது நாளாக நீடிக்கும் பஸ் ஸ்டிரைக்: அரசுக்கு வருவாய் இழப்பு அதிகரிப்பு

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்கிட வேண்டும், ஓய்வூதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும், விதிகளுக்குப் புறம்பாக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து செலவு செய்த, ஊழியர்களின் ஊதியப்பிடித்தம் 7,000 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 4-ந் தேதி போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பெரும்பாலான அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளதால் அண்ணா தொழிற்சங்கம் ஊழியர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்களை வைத்தும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே ஓடுவதால் அவற்றில் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக உள்ளது. போதிய அனுபவம் இல்லாத தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் இயக்கும் பேருந்துகள் விபத்துக்குள்ளாகி சிலர் உயிர் இழந்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பாமல் 5-வது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்கின்றனர். இதனால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.

மாநகர போக்குவரத்து கழகம் பஸ்களை இயக்கினாலும் அதில் போதிய பயணிகள் இல்லாததால் வருமானம் குறைந்து விட்டது. சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தனியார் பஸ்கள் இயங்குவதால் அரசு பஸ்களில் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டசபை இன்று தொடங்க உள்ள நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை சட்டசபையில் பெரும் விவாத பொருளாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top