தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து மோதி விருத்தாசலத்தில் ஒருவர் பலி: 4 பேர் காயம்

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்கிட வேண்டும், ஓய்வூதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும், விதிகளுக்குப் புறம்பாக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து செலவு செய்த, ஊழியர்களின் ஊதியப்பிடித்தம் 7,000 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது

கடந்த 4 தினங்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து, தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களைக் கொண்டு அரசு, பேருந்துகளை இயக்கிவருகிறது.

அந்த வகையில் விருத்தாசலம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து விருத்தாசலம் பேருந்து நிலையம் நோக்கி இரு பேருந்துகளை தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கிவந்துள்ளனர்.

சாமுவேல் மற்றும் அவரது மகள் சாரத்சிட்டி(7) ஆகியோரை அழைத்துக் கொண்டு, துக்க நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அவரின் உறவினர் உடன் சென்று உள்ளார்.

அப்போது, விருத்தாசலம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து பேருந்து நிலையம் நோக்கி சென்ற இரு பேருந்துகளுக்கு முன்னால் சென்றுள்ளார்.

திடீரென தற்காலிக ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிய பேருந்து, முன்னால் சென்ற பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதே வேகத்தில் முன்னால் சென்று பேருந்து மொபட் மீது மோதியது. இதில் மொப்பட்டை ஒட்டிச் சென்ற சீயான் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். மேலும் சாராத்சிட்டி மற்றும் சாமுவேல் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து காயம்பட்டவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்த சீயான் உடல் பிரேத பரிசோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

போக்குவரத்துக் கழகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பேருந்தை இயக்குவதால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டித்தும் அரசுப் போக்குவரத்துக் கழக விருத்தாசலம் பணிமனை தொழிலாளர்கள் பணிமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விபத்தைக் கண்டித்து விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

உடனடியாக அரசு தலையிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top