4வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம்;

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்கிட வேண்டும், ஓய்வூதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும், விதிகளுக்குப் புறம்பாக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து செலவு செய்த, ஊழியர்களின் ஊதியப்பிடித்தம் 7,000 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது.

குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே ஓடுவதால் அவற்றில் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், இந்த வேலைநிறுத்தத்துக்கு எதிராக இந்திய மக்கள் மன்ற தலைவர் வராகி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு தடை விதித்ததோடு, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு அவர்களுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் ஐகோர்ட்டின் உத்தரவை ஏற்க மறுத்துவிட்டனர்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று மாலை நடந்தது.

இந்த கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தொழிற்சங்க நிர்வாகிகள், வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்றும், நாளை (8-ந் தேதி) தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர். மேலும் நாளை முதல் வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்துவதில் தொழிற்சங்கங்கள் முனைப்புடன் உள்ளன.

இந்த நிலையில், போக்கு வரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. மாநிலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. பெரும்பாலான அரசு பஸ்கள் இயங்காததால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

சென்னை கோயம்பேடு, பாரிமுனை பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பணிமனைகளில் இருந்து குறைவான பஸ்களே இயக்கப்பட்டன.

பஸ்கள் ஓடாததால் மின்சார ரெயில்களிலும், மெட்ரோ ரெயில்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் குறைந்த எண்ணிக்கையிலான அரசு பஸ்களே இயக்கப்பட்டன.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை முறியடித்து, தற்காலிக ஊழியர்கள் மூலம் பஸ்களை இயக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போக்கு வரத்து கழகம் எடுத்து வருகிறது. பணிமனைகளில் அறிவிப்புகள் ஒட்டப்பட்டும், ஒலிபெருக்கிகளில் அறிவிக்கப்பட்டும் தற்காலிகமாக டிரைவர்கள், கண்டக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

வேலை நிறுத்தம் தொடர்ந்தால் நாளை முதல் தற்காலிக பணியாளர்களை முழுவீச்சில் ஈடுபடுத்துவதற்கு போக்கு வரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு, விளக்கம் கேட்டு போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

போக்குவரத்துக்கு தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டம் குறித்து கடந்த இரண்டு நாட்களாக தமிழக கட்சி தலைவர்கள் தொழிலாளர்களின் நியமன கோரிக்கைகைகள் நிறைவேற்றப்பட வேண்டும் அவர்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டு பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்று வலியுரித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top