கமல்ஹாசனை கண்டித்து ஆர்.கே.நகர் பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார்.

இதுபற்றி நடிகர் கமல்ஹாசன் வார இதழில் எழுதிய கட்டுரையில் கடுமையாக விமர்சனம் செய்து கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். பணம் கொடுத்து வெற்றியை விலைக்கு வாங்கி விட்டதாக அவர் கூறி இருந்தார். மக்கள் பணத்திற்காக தவறானவரை வெற்றி பெற செய்து விட்டதாக கூறி இருந்தார்.

அதுமட்டும் இன்றி ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க மற்றும் இதர பிற கட்சிகளும் பணம் கொடுத்ததாக புகார்கள் எழுந்தது ஆனால் நடிகர் கமல் ஹாசன் அனைவரையும் விமர்சிக்காமல் மக்களை இழிவு படுத்தும் வகையில் பேசி இருந்தார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்களிப்பதற்காக பணம் பெற்றது திருடனிடம் பிச்சை எடுப்பதற்கு சமமானது என்றும் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்து இருந்தார்.

அவரது இந்த விமர்சனத்திற்கு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்தவர்கள் போலீஸ் நிலையத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக புகார் கொடுத்தனர்.மேலும், தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த வக்கீல் சிவா ஆருத்ரா என்பவரும் கமல் மீது புகார் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை நடிகர் கமல்ஹாசனை கண்டித்து ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்த பெண்களும், பொது மக்களும் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தண்டையார் பேட்டை திருவொற்றியூர் தெரு, ஏ.இ.கோவில் தெரு சந்திக்கும் பகுதியில் 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். தங்களை கொச்சைப்படுத்தி பேசிய கமல்ஹாசன் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

பொதுமக்களின் சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, சப்-இன்ஸ்பெக்டர் உமயவேல் பாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர். இதே போல் தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் பொது மக்களை இழிவுபடுத்தி பேசியதை கண்டித்து மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர். நூற்றுக்கணக் கானவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

நடிகர் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் மக்களை இழிவுபடுத்தியது தொடர்பாக வக்கீல் திருக்கண்ணன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே நேற்று புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையம் சென்று புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top