அனைத்துப் போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப்பேசி தீர்வு காண வேண்டும் – மு.க.ஸ்டாலின்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்கிட வேண்டும், ஓய்வூதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும், விதிகளுக்குப் புறம்பாக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து செலவு செய்த, ஊழியர்களின் ஊதியப்பிடித்தம் 7,000 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் முன்னிலையிலும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிதி இல்லை என்ற காரணத்தைக் காட்டி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிராகரித்ததின் விளைவாக, மாநிலம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

உங்கள் கோரிக்கை நியாயமானதுதான், என்று போக்குவரத்துத்துறை அமைச்சரே தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அதற்கேற்ப அந்த நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக தொழிலாளர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத்தீர்வை எட்டுவது தான் பொறுப்பான அரசின் கடமையாக இருக்க முடியும்.

அமைச்சர் அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அனைத்துப் போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் உடனடியாக சுமுகமான தீர்வை காண வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் கேட்டுக்கொள்கிறேன்.

அதை விடுத்து, ஆளுங்கட்சியின் அண்ணா தொழிற்சங்கத்தைக் கொண்டு பேருந்துகளை ஓட்டுவோம் என்று அறிவித்து, அதற்கான முயற்சிகளை எடுப்பது, அ.தி.மு.க.வின் வீண் ஜம்பத்தையும், ஆணவப்போக்கையும் வெளிப்படுத்தி, கொழுந்துவிட்டு எரியும் நெருப்புக்குள்ளே விரலை விட்ட குழந்தையின் கதைபோல ஆகிவிடும், என எச்சரித்திடவும் விரும்புகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top