ரஜினியின் ஆன்மிக அரசியல் என்பது பித்தலாட்டம்: கி.வீரமணி

ஆந்திர நாத்திக மையம், திராவிடர் கழகம் சார்பில் உலக நாத்திகர் மாநாடு திருச்சி சுந்தர்நகரில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கி மாநாட்டை தொடங்கி வைத்தார். பொது செயலாளர் அன்புராஜ் வரவேற்றுப் பேசினார். பெரியார் பன்னாட்டு மைய இயக்குனர் டாக்டர் லட்சுமண் தமிழ் தொடக்கவுரையாற்றினார். தொடர்ந்து நாத்திகம் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது.

மாநாட்டில் கி.வீரமணி பேசியதாவது:-

மனித குலத்தின் உரிமைகளை சட்டப்படி மீட்டு எடுக்க இருக்கும் ஒரே நம்பிக்கை நாத்திகம் தான். இந்த மாநாடு கடவுள் மறுப்பு மட்டும் அல்ல, சமூகத்தில் நிலவி வரும் தீண்டாமை, சாதிய கொடுமைகளுக்கு எதிராகவும் நடத்தப்படுகிறது. நாத்திகம் என்பது அனைத்து செயல்களையும் அறிவியல் ரீதியாக அணுகக்கூடியது. இந்தியாவில் நிலவிய சாதி, தீண்டாமைகளை அகற்ற முயற்சி செய்தவர் பெரியார். அது இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இவ்வாறு கூறினார்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெரியார் கற்பித்த கடவுளை மற, மனிதனை நினை என்ற வாசகத்துக்கு உலகம் முழுவதும் தற்போது வரவேற்பு அதிகரித்து வருகிறது. மதம் மக்களை பிரிக்கிறது. ஆனால் இணைப்புகளை உருவாக்குவது நாத்திகமும், பகுத்தறிவும் தான். தமிழகத்தில் ஆன்மிக அரசியல் நடத்தப்படும் என்று ரஜினிகாந்த் கூறி இருக்கிறார். ஆத்மா, ஆன்மிகம் என்பது பித்தலாட்டம். இல்லாத ஒன்றை நடத்துகிறோம் என்கிறார்கள். உணர்வுகளை உருவாக்கும் ஆத்மா, கூடு விட்டு, கூடு பாயுமாம் என்பது போல் பலர் கூடு விட்டு கூடு பாய்கிறார்கள். எனவே ஆன்மிக அரசியல் என்பது பித்தலாட்டம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, திராவிட இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன், பன்னாட்டு மனித நேய மற்றும் நன்னெறி ஒன்றிய லண்டன் தலைமை செயல் அதிகாரி கேரே மெக்கலாண்ட் உள்பட பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாடு தொடர்ந்து 7-ந்தேதி வரை நடக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top