தமிழகம் முழுவதும் அரசு பஸ்கள் ஓடவில்லை; 2-வது நாளாக போராட்டம் தொடர்கிறது; அரசு மெத்தனம்

 

 

தமிழகம் முழுவதும் இன்று 2-வது நாளாக அரசு பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். தமிழகம் முழுவதும் சுமார் 10 சதவீத பஸ்களே இயக்கப்பட்டன.

 

தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1.43 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

 

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்களது சம்பளம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதியுடன் முடிந்தது.

 

இதையடுத்து அரசுக்கும், போக்குரத்துக் கழகங்களில் உள்ள 46 தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்தது. மொத்தம் 21 தடவை இதுவரை பேச்சு நடந்துள்ளது. ஆனால் அவை அனைத்தும் எந்த முடிவுக்கும் வராமல் தோல்வியில் முடிந்தது.

 

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் மற்றும் ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக சம்பள உயர்வு 2.57 மடங்கு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

அரசு தரப்பில் மூன்று விதமான சம்பள உயர்வு தருவதாக தெரிவிக்கப்பட்டது. பணியில் சேர்ந்து ஆறு வருடங்களுக்கு குறைவான ஊழியர்களுக்கு 2.44 மடங்கும், 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியில் இருப்பவர்களுக்கு 2.41 மடங்கும், 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுக்குள் பணியில் சேர்ந்தவர்களுக்கு மூன்று மடங்கு சம்பள உயர்வும் தர அரசு தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

 

தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கேட்பது போன்று 2.57 மடங்கு சம்பள உயர்வு வழங்கினால், டிரைவர்கள், கண்டக்டர்களின் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.19 ஆயிரத்து 500 ஆக இருக்கும். அரசு தெரிவித்துள்ள 2.44 மடங்கு சம்பள உயர்வு வழங்கினால் டிரைவர்கள், கண்டக்டர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.17,500 ஆக இருக்கும்.

 

மாத சம்பளத்தில் ரூ.2 ஆயிரம் உயர்வு வித்தியாசம் வந்ததால் அரசின் முடிவை ஏற்க தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச. உள்பட 13 தொழிற்சங்கங்கள் மறுத்தன. ஆனால் அரசின் முடிவை 30 தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொண்டன.

 

என்றாலும், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் தங்களது சம்பள உயர்வு கோரிக்கையில் உறுதியாக இருந்தனர். ஆனால் அதை ஏற்க அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டது. இதையடுத்து நேற்று மாலையே அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கத்தினர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

 

தமிழ்நாடு முழுவதும் நேற்று மாலை முதல் அரசு பஸ்கள் ஓடவில்லை. பல இடங்களில் பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர். சென்னையில் நேற்றிரவு 90 சதவீத பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 13 தொழிற்சங்கத்துடன் மீண்டும் பேச்சு நடத்தப் போவதில்லை என்று அரசு முடிவு செய்துள்ளது. 90 ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்ட அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் ஆதரவு தொழிற் சங்கத் தொழிலாளர்கள் மூலம் அரசு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் சுமார் 10 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.

 

90 சதவீதம் பஸ்கள் இன்று 2-வது நாளாக இயக்கப்படவில்லை. சென்னையில் இன்று காலை 35 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் மற்ற மாவட்டங்களில் மிக, மிக குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டன.

 

பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் இன்று 2-வது நாளாக தமிழ்நாடு முழுவதும் பொது மக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்களும் நிறுத்தப்பட்டதால் வெளி மாநிலத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

 

சென்னையில் வேலைக்கு செல்லும் பெண்கள் இன்று காலை தவிப்புக்குள்ளானார்கள். பஸ்கள் இல்லாததால் அவர்கள் ரெயில், ஷேர் ஆட்டோக்களை நாட வேண்டியதிருந்தது.

 

இதையடுத்து முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top