இந்தியா-தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் இன்று; பழிதீர்க்க ஆர்வம்: தென்ஆப்பிரிக்க கேப்டன்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இதற்கு முன்பு 6 முறை தென்ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் கால்பதித்து இருக்கும் இந்திய அணி ஒரு முறை கூட தொடரை கைப்பற்றியது கிடையாது. ஆனால் இந்த முறை விராட் கோலியின் படை அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

உள்நாட்டில் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து ‘நம்பர் ஒன்’ அணியாக வலம் வரும் இந்தியா, உண்மையான சோதனை களத்தை இனி தான் பார்க்கப்போகிறது.

தென்ஆப்பிரிக்கா உடனான கடினமான இந்த தொடருக்கு என்று இந்திய அணிக்கு எந்த வித சிறப்பு முகாமும் நடத்தப்படவில்லை. பயிற்சி ஆட்டம் கூட ரத்து செய்யப்பட்டது. இதற்கு பதிலாக கூடுதலாக பயிற்சி எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்திய இந்திய அணியினர் சவால்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்ற ஆவல் எல்லோரிடமும் காணப்படுகிறது.

தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் கூறியதாவது:-

‘இந்தியாவுக்கு எதிரான அடுத்த டெஸ்ட் தொடர் எப்போது வரும் என்று எனக்கு தெரியாது. அனேகமாக எங்களது சீனியர் வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடப்போகும் கடைசி டெஸ்ட் தொடராக இது இருக்கும். 2015-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் தோற்றோம். அந்த தோல்விக்கு பழிதீர்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறோம். அதனால் இந்த தொடரை நினைக்கும் போதே பரவசம் ஏற்படுகிறது.

கேப்டவுன் ஆடுகளத்தை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. நாங்கள் எந்த மாதிரி விரும்பினோமோ அதை போன்று இருப்பது போல் தான் தெரிகிறது. ஆடுகளத்தன்மையை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்போம்’ என்றார்.

கேப்டவுன் ஆடுகளத்தை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். முதல் நாள் மற்றும் 4-வது நாளில் மேகமூட்டமான சீதோஷ்ண நிலையுடன், காற்றின் தாக்கமும் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: முரளிவிஜய், ஷிகர் தவான் அல்லது லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, விருத்திமான் சஹா, ரோகித் சர்மா அல்லது ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா.

தென்ஆப்பிரிக்கா: டீன் எல்கர், எய்டன் மார்க்ராம், அம்லா, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), டிவில்லியர்ஸ் அல்லது டெம்பா பவுமா, குயின்டான் டி காக், பெலக்வாயோ அல்லது கிறிஸ் மோரிஸ், கேஷவ் மகராஜ், வெரோன் பிலாண்டர், ரபடா, மோர்னே மோர்கல் அல்லது ஸ்டெயின்.

இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி டென்1, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top