பஸ் ஸ்டிரைக்: தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு: பணிமனைகளில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே நடந்த பேச்சில் நேற்று இரவு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை அ.தி.மு.க. உள்பட 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன, ஆனால் தி.மு.க. உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன. இதனால் அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மட்டுமே பேருந்துகளை இயக்கி வருகின்றனர். ஏராளமான பேருந்துகள் ஓட்டுவதற்கு டிரைவர் இல்லாமல் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தினக்கூலி அடிப்படையில் தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை நியமித்து பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு பேருந்துகளை இயக்க தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை என திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற பணிமனைகளுக்கும் தற்காலிக ஊழியர்களை நியமிக்கும் நடைமுறை தொடங்கியது.

தமிழகம் முழுக்க உள்ள அணைத்து பணிமனைகளிலும் தற்காலிக ஊழியர்கள் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களை கலைந்துசெல்லும்படி போலீசார் எச்சரித்தனர். அப்போது போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்- தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பணிமனைகளில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

இவ்வாறு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், 80 சதவீத பேருந்துகள் இயங்குவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top